இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   89
Zoom In NormalZoom Out


 

இது, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது.

"சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற்
பெருந்தேன் இறாலொடு சிதறு நாடன்
பேரமர் மழைக்கண் கலிழத்தன்

சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்."    (ஐங்குறு.199)

இது தலைவிக்கு உரைத்தது.

"கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் எறிமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி

செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே."  (ஐங்குறு.214)

இது தலைவியை ஆற்றுவித்தது.

"இருள் திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்

பல்மீன் வேட்டத் தென்னையர் திமிலே."       (குறுந்.123)

எனவும் வரும்.

வேளாண்   பெருநெறி    வேண்டியவிடத்தினும்    என்பது    -
வேளாண்மையாவது    உபகாரம்.   பெருநெறியாவது   உபகாரமாகிய
பெருநெறி   என்க.   அதனைத்   தோழி   தலைவனை   வேண்டிக்
கோடற்கண்ணும் என்றவாறு.

"நெடுவேள் மார்பின் ஆரம் போலச்
செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும்
பைங்காற் கொக்கின் நிரைபறை யுகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்
கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு
மதரெழில் மழைக்கண் கலிழ இவளே
பெருநாண் அணிந்த சிறுமென் சாயல்
மாணலஞ் சிதைய ஏங்கி ஆனாது
அழல்தொடங் கினளே பெரும அதனாற்
கழச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரொ டெல்லிச் செல்லாது
சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண்

சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே."     (அகம்.120)

என்பதும்.

"நிலாவின் இலங்கும்" என்னும் அகப்பாட்டினுள்,

"சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும்
எம்வரை அளவையிற் பெட்குவம்

நும்மொப் பதுவோ உரைத்திசின் எமக்கே".    (அகம்.220)

என்பதும் கொள்க.

இதனாற் பயன் இல்லறம் நடத்தல் வேண்டும் என்பது.

புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது - தலைவனொடு
தலைவி   புணர்ந்தவழி  ஆண்டுப்  பொருந்திய  அறிவு   மடம்பட்ட
சிறப்பின் கண்ணும் என்றவாறு.

அஃதாவது அல்ல குறிப்படுதல். அவ்வழியும் தோழி கூற்று நிகழும்.

"கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -படையெலாந்
தெய்வம் கமழுந் தெளிகடல் தண்சேர்ப்பன்

செய்தான் தெளியாக் குறி".           (ஐந்திணையைம்-49)

"இடுமணல் எக்கர் அகன்காணல் சேர்ப்பன்
கடுமான் மணியரவம் என்று- கொடுங்குழை
புள்ளரவங் கேட்டும் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவம் நாணுவார் என்று".        (ஐந்திணையெழு.57)

"அம்ம வாழியோ அன்னைநம் படப்பை
மின்னேர் நுடங்கிடைச் சின்னிழ லாகிய
புன்னை மென்காய் பொருசினை அரிய
வாடுவளி தூக்கிய அசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென

எண்ணினை யுரைமோ உணர்குவல் யானே"

என வரும்.

ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்  என்பது  -  ஓம்படுத்துதற்
பொருட்பகுதிக்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது ஒருவழித் தணக்கும்வழி ஓம்படை கூறுதல்.

"பெருநன் றொன்றிற் பேணாரும் உளரே
ஒருநன் றுடையா ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வளிமத யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்

நன்மலை நாட நின்னல திலளே." (குறுந்.115)

எனவும்,

"எறிந்தெமர் தாமுழுத ஈர்ங்குரல் ஏனல்
மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட மடமொழி தன்கேண்மை

நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு".      (ஐந்திணையைம்.18)

எனவும் வரும்.

இதனுள் கிளிகடிய யாம்    வாரேம்    நீ    மறவா    தொழிதல்
வேண்டுமென்றவாறு.

செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினு மென்பு நெகப் பிரிந்தோள்
வழிச்சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் என்பது
-  செவ்விய      கடிய     சொல்லினானே,    தலைவன்    அன்பு
சிதைவுடைத்தாயினும்   என்புருகுமாறு  பிரியப்பட்டவளிடத்துச் சென்று
தலைவன்   அன்புடைமையின்   அளிப்பன்    என     ஆற்றுவித்த
வற்புறுத்தற்கண்ணுந் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

செங்கடுமொழி  என்றது - கொடிய கடுமொழியேயன்றி மனத்தினாள்
இனியளாகிக் கூறும் கடுமொழி . அஃதாவது  இயற்பழித்தல்.  அவ்வாறு
இயற்பழித்தவழித் தலைவன் அன்பு  சிதைவுடைத்தாயினும்  என்றவாறு.
அன்புதலையடுத்த  வன்புறையாவது தலைவன்  இன்றியமையான்  என
ஆற்றுவித்தல்.

இயற்பழித்தற்குச் செய்யுள்:-

"மாறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கு நாடன்நீடு
நோய்தந் தனனே தோழி

பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே". (குறுந்.13)

வன்புறைக்குச் செய்யுள்:-

"மகிழ்நன் மார்பே வெய்யைஎன நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டு