மாற் சிறிதே". (குறுந்.73)
"மெய்யில் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே
முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலோ டமைந்தனை யாழவின்
பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து
கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி
ஆங்காங் கொழுகா யாயின் அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்
றற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே". (அகம்.28)
ஆற்றுவித்தற்குச் செய்யுள்:-
"குறுங்கை இரும்புலி கோள்வல் ஏற்றை
நடும்புதற் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கு நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாகம் எவன்கொல் அன்னாய்". (ஐங்குறு.216)
"அழியல் ஆயிழை அன்புபெரி துடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத்
தங்குதற்குரிய தன்றுநின்
அங்கலும் மேனிப் பாஅய பசப்பே" (குறுந்.143)
எனவும்,
"பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்
கருங்கால் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ்
சுரும்பிமிர் சோலை மலைநாடன்
பொருந்தினார்க் கேமாப் புடைத்து". (ஐந்திணையெழு.12)
எனவும் வரும்.
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்....வரைதல் வேண்டியும் என்பது -
தலைவன் வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்றதனால் எய்திய கலக்கத்தாலும் காவற் கடுமை வரையிறந்ததனானும் குறியிடமும்|
காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலைமையை விலக்கித் தலைவி காதல்
மிகுதல் உட்படப் பிறவுந் தலைவனது நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் மிகுதியும் நோக்கித் தலைவன்மாட்டுக் கிளக்குங்
கிளவியோடே கூட அத்தன்மைத்தாகிய நிலவகையினானே வரைதல்
வேண்டியும் தோழி கூறும் என்றவாறு.
அவற்றுள் ஆறின்னாமை கூறியதற்குச் செய்யுள்:-
"சாரற் புனத்த பெருங்குரற் சிறுதினைப்
பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவுஞ்
சோலைச் சிறு கிளி உண்ணும் நாட
ஆரிருள் பெருகின வாரல்
கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே." (ஐங்குறு.282)
காப்பு வரை யிறந்ததற்குச் செய்யுள்:-
"பல்லோர் துஞ்சு நன்என் யாமத்து
உரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளேம் அல்லேங் கேட்டனம் பெறாம்
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்குயாம்
முயங்குதொறு முயங்கும் அறனில் யாயே". (குறுந்.244)
எனவும்,
"கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே" (குறுந்.69)
எனவும் வரும்.
காதன் மிகுதி கூறியதற்குச் செய்யுள்:-
"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே." (குறுந்.18)
பிறவும் என்றதனால் தலைவனைப் பழித்தலும் கொள்க.
"நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெருவும் நாட
வல்லைமன் தம்ம பொய்த்தல்
வல்லாப மன்றநீ அல்லது செயலே." (ஐங்குறு.288)
இது, தலைவனைப் பழித்தது.
"குன்றக் குறவன் காதல் மடமகள்
மென்தோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் படுகினி யோப்பலவர்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே." (ஐங்குறு.260)
இது, புனக்காவலினி இன்றென்றது.
"கொடிச்சி யின்குரல் கிளைசெத் தடுக்கத்துப்
பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக்
காவலுங் கடியுநர் போல்வர்
மாமலை நாட வரைந்தனை கொள்மே."
இது, குறவரியல்பு உணர்த்தி வரைக வென்றது.
"வெறிகமழ் வெற்பன் என் மெய்நீர்மை கொண்ட(து)
அறியாள்மற் றன்னோ அணங்கணங்கிற் றென்று
மறியீர்த் துதிரந்தூய் வேலற் றரீஇ
வெறியோ டலம்வரும் யாய்." (ஐந்திணையைம்.20)
இது, வெறி யச்சுறுத்தியது.
"இனமீ னிருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரிக்குந் துறைவ தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு" (திணைமொழி.44)
இஃதருளல் வேண்டுமென்றது.
இன்னும் பிறவும் என்றதனால் தலைமகள் தன்னை யழிந்தமை
கூறுதலுந் தலைவன்மாட்டு வருமிடையூறு அஞ்சுதலுங் கொள்க.
அது வருமாறு :
"........................................
தன்எவ்வங் கூரினும் நீசெய்த அருளின்மை
என்னையு மறைத்தாள் என்தோழி அதுகேட்டு
நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தான் நாணி".
(கலி,44)
|