விலக்கல், பிறன் வரைவு மறுப்பித்தல்
அவன் வரைவுடம்படுத்தல்,
வரைவுடம்பட்டமை தலைவற்குக் கூறல், உடம்பட்டமை தலைவிக்குக்
கூறி வற்புறுத்தல் என இவை
தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன என்பது - இவை முப்பத்திரண்டு பொருண்மையும் தலைவிக்கு இன்றியமையாத தோழி மேலன
என்றவாறு.
(24)
113. களவல ராயினுங் காமமேற் படுப்பினும்
அளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங்
கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும்
காதல் கைம்மிகக் கனவின் அரற்றலுந்
தோழியை வினாதலுந் தெய்வம் வாழ்த்தலும்
போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
பிரிவின் எச்சத்து மகள்நெஞ்சு வலிப்பினும்
இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும்
இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு
அன்னவை பிறவுஞ் செவிலி மேன.
என்றது மேற் றலைவற்குந்
தலைவிக்குந் தோழிக்குமுரிய
கிளவியெல்லாங்கூறி இனிச் செவிலிக்குரிய
கிளவி யுணர்த்துதல்
நுதலிற்று.
களவலராதல் முதலாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று கிளவியும்
அத்தன்மைய பிற கிளவியும் களவுகாலத்துச் செவிலியின் மேலன
என்றவாறு. இவற்றுள் தோழியை வினாதலென
வேறொரு கிளவியாக
ஓதினாராயினும் அதன் முன்பு நிகழும் கிளவியெல்லாம் அவளை
வினாதற்குக் காரணமாதலின்
அவை யீண்டுப் பதின்மூன்றென
வெண்ணப் பட்டன வென்க.
களவள ராயினும் என்பது - தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்குப்
புலனாகி அலர் தூற்றப்பட்ட விடத்துத் தோழியை வினாவும் என்றவாறு.
உதாரணம்:-
"பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொல்இப் பேதை ஊர்க்கே
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை எழுதிய
நல்லியற் பாவை அன்ன என்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே".
(குறுந்.89)
காம மேற் படுப்பினும் என்பது -
தலைவிமாட்டுளதாகிய வேட்கை
அளவிறப்பினும் தோழியை வினாவும் என்றவாறு.
"மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு."
(குறள்.1273)
அளவு மிகத் தோன்றினும் என்பது - பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி
புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங்
கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு.
"கண்நிறைந்த காரிகைக் காம்பேர் தோட்பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
[குறள்.1272]
தலைப்பெய்து காணினும் என்பது - தலைவனோடு தலைவியைத்
தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு.
பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க.
"... ... ... ... ... ... ...
மிடையூர் பிழியக் கண்ட னென்".
[அகம்.158]
என வரும்.
கட்டினும் என்பது - கட்டுவைப்பித்த வழியும்
அவர்சொற் கேட்டுத்
தோழியை வினாவும் என்றவாறு.
கழங்கினும் என்பது - கழங்கு வைத்துழியும்
அவர்சொற் கேட்டுத்
தோழியை வினாவும் என்றவாறு.
வெறியென விருவிரு மொட்டிய திறத்தாற்
செய்திக்கண்ணும்
என்பது செவிலியும் நற்றாயும் பொருந்திய பக்கத்துக் கண்டு
வெறியாடுவா மென்றவழித் தலைவி யெய்திக்கண்ணுந்
தோழியை
வினாவும் என்றவாறு.
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது - வெறியாடிய
சென்றவழி அதற்கழிவுறுமிடத்து வரினும் என்றவாறு.
அஃதாவது: `கடவுட் கற்சுனை' எனத் தொடங்கும்
நற்றிணைப்
பாட்டில்.
"நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே".
[நற்றிணை.34]
எனத் தோழி
கூறுதல். அவ்வாறு
கூறியவழியுங்
காரணமென்னையென வினாவும்.
காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் என்பது -
காதன் மிகுதியால்
தலைவனை யுள்ளிக் கனவின்கண் அரற்றுதற்கண்ணும் வினாவும்.
தோழியை வினாதலும் என்பது - இவை நிமித்தாமாகத் தோழியை வினாதலும்
என்றவாறு. எனவே களவலராதல் முதற் கனவினரற்ற வீறாக ஓதிய
வொன்பது கிளவியும் தோழியை
வினாதற்பகுதி. அவை
நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாதலென
ஒரு கிளவியாக எண்ணற்க.
தெய்வம் வாழ்த்தலும் என்பது - இவ்வாறு பட்டதெனத் தோழி
யுரைத்தவழி யிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றாதான்
தெய்வத்தை வேண்டிக்கோடல்.
போக்குடன்
|