இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   95
Zoom In NormalZoom Out


 

அறிந்தபின்...நிற்றற் கண்னும் என்பது - தலைவனுடன் போயினான்
என்று     அறிந்தவழித்      தானுந்     தோழியோடு     கெழுமி
இல்லத்தின்கணிறுத்தற் கண்ணும் என்றவாறு.

"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே."         (குறுந்.15)

பிரிவி  னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினும் என்பது  -  தலைவன்
வரையாது பிரிந்தவழி   யொழிந்த    தலைகள்    அலராகுதலுமின்றி
வேறுபாடுமின்றி    ஒரு   மனைப்பட்டிருந்த    வுள்ளக்    கருத்தை
யறிந்தவழியும் என்றவாறு. வலித்தல் என்பது தெளிதல்.

இருபாற்   குடிப்பொரு   ளியல்பின்கண்ணும் என்பது - தலைவன்
குடிமை   தன்  குடிமையோ   டொக்குமென   வாராய்தற்  கண்ணும்
என்றவாறு.

குடியென்னாது   பொருள்   என்றதனால்   பொருளுங்  குணமும்
ஆயப்பெறு மென்றவாறு.

அன்னவை பிறவும் என்றதனான்.

"நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்

கண் துயில் மறுத்தல் கோலஞ்செய் யாமை".

முதலாயின கொள்க. இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற்
கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க.

114. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே.

இது நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

செவிலியுணர்வோடு  உடம்பட்ட   வுள்ளத்தளாயின்  நற்றாய்க்கும்
மேற்சொல்லப்பட்டவை யெல்லாம் வரையப் படா வென்றவாறு.

உணர்வுடம்  படுதலாவது தலைவியை யுற்று  நோக்கும் நிகழ்ந்தவழி
வன்றித்   தானும்  செவிலியைப்போல உற்று  நோக்காளென்றுகொள்க.
இப்பொருள்மேற்  கிளவி வருவன   உளவேனுஞ்   செவிலியைப்போல
வொருப்பட்டவுள்ளத்தளாயின் அவள்கண்ணும்  இக்   கிளவியெல்லாம்
நிகழும் என்றவாறு.  உடம்படாதவாறு  என்னை  யெனின், யாரிடத்தும்
மக்களை வளர்ப்பார்   செவிலியராகலானும்   தமக்குத்  தம்   இல்லற
நிலைக்குக்  கடவ   பகுதியான   அறனும்   பொருளும்    இன்பமும்
வேண்டுதலானும்  கூற்றொடு வேறுபாடு தோன்றாது.             (26)

115. கிழவோன் அறியா அறிவினள் இருளென
மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே.

இது நற்றாயும் செவிலியும் துணியுமாறு கூறுகின்றது.

கிழவோன் அறியா  அறிவினன்  என்பது  -  தலைமகன்  அறியா
அறிவினையுடையவள்  என்றவாறு.  எனவே  ஒரு பக்கம்  எதிர்காலம்
நோக்கிக் கூறினார் போலத் தோன்றும்;   ஒரு   பக்கம்  இறந்தகாலம்
தோன்றும். அவன்   அறியாத    அறிவுரிமை   பூண்டு   மயங்குதல்,
அவள்   எத்துணையும்   மயக்கமிலள்   எனவும்   அவன் பொருட்டு
மயங்கினாள்   எனவும்படக்     கூறுதல்,     தலைவன்    அறியாத
அறிவினையுடையவள்      எனக்    குற்றமற்ற    சிறப்பினையுடைய
உயர்ந்தோர்மாட்டு உளதாகிய ஐயக்கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து,
செவிலிக்கும் நற்றாய்க்கும் என்றவாறு.

இஃது ஏற்றினான் ஆயிற்று எனக் குற்றமற்ற  தவரை  வினாய வழி
அவர் இவ்வாறு   பட்டதென  மெய்கூறுதலுந்  தகுதியன்றாம்;  பொய்
கூறுதலும்  தகுதியன்றாம்.  ஆதலால்  ஐயப்படுமாறு  சில   கூறியவழி
அதனானே யுணர்ப  என்றவாறு.  கிழவோனறியா  வறிவினளென்றவாறு
கூறியவழிக்   கிழவோனெதிர்ப்பட  ...இறந்த   காலத்துள்   தலைவன்
உளன் என்றவாறாம்.                                      (27)

116. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப.

இது, தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று.

தலைவி   தனது   வேட்கையைக்   கிழவன்   முன்பு சொல்லுதல்
நினைக்குங்    காலத்துக்     கிழத்திக்கு      இல்லை.    அங்ஙனம்
சொல்லாதவிடத்தும் புதுக்கலத்தின்கட் பெய்த நீர்போலப் புறம்பொசிந்து
காட்டும் உணர்வினையு முடைத்து அவ்வேட்கை என்றவாறு.

எனவே,  குறிப்பின் உணரநிற்கும் என்றவாறு.  தலைவன்  மாட்டுக்
கூற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும்.                 (28)

117. காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின்
தாமே தூதுவ ராகலும் உரித்தே.

என்றது, களவிற்புணர்ச்சிக் குரியதொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

மேற்    சொன்னவாற்றால்   பாங்கனுந்   தோழியு   நிமித்தமாகக்
கூடுதலேயன்றித் தாமே தூதுவராகிய கூட்டங்கள்  நிகழப்பெறும்;  அது
சிறப்புடைத் தாதலால் என்றவாறு.

எனவே, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியமமில்லை;
யார்மாட்டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின் என்றமையான் இது
மிகவும் நன்று.

118. அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்

தான்செலற் குரியவழி யாக லான.

இது சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவா னுணர்த்துதல்
நுதலிற்று.

தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவனெல்லையை
மறத்தல் தலைவிக்கு