இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   97
Zoom In NormalZoom Out


 

இருவரு  முன்வழி   யவன்   வரவுணர்தல்'  அதன்பின்   வைத்தார்.
ஆண்டுப்புதுவோன் போலத்  தலைவன் தருதலானும்  தலைவி  கரந்த
உள்ளத்தளாய்  நிற்குமாதலானும்  அத்துணைப்   புலப்பாடின்மையின்,
அக்கருத்தினானே  மேற்சொல்லப்பட்ட  தோழி  கூற்று மூவகையாகப்
பொருள் உரைத்ததென்று கொள்க.                          (37)

126. அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப.

இதுவும் தோழிக்கு உரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான் இருவர்  மாட்டும் அன்புடைமை
உணர்ந்தபின்  அல்லது  வழிபாட்டு   நிலைமையாற்    கூட்டத்திற்கு
முயலப்பெறாள் தோழி என்றவாறு.

அஃதேல்,  உள்ளப்புணர்ச்சியானின்று  மெய்யுறாது   கூட்டத்திற்கு
முயல்வார்   உளர்  ஆயின்,  அஃதெற்றாற்பெறும்  எனின் ஆண்டும்
இருவர்  மாட்டுளதாகிய   அன்புடைமையான்  மன   நிகழ்ச்சியுளவாக
அந்நிகழ்ச்சி      கண்டுழியும்     முயலப்பெறுமென்று      கொள்க.
அதனானேயன்றே   `முன்னுறவுணர்தல்'    என்னும்    சூத்திரத்தினும்
`புணர்ச்சியுடம்படுதல்'  என்னாது   `மதியுடம்படுதலொரு   மூவகைய '
எனப்    பொதுப்பட    ஓதுவாராயிற்    றென்க.    அவ்வன்பினான்
வருநிகழ்ச்சியுள்ள   வழியும்    இவ்விட   மூன்றினும்   காலமுண்மை
அறியலாகும்.

127. முயற்சிக் காலத் ததற்பட நாடிப்
புணர்த்த லாற்றலும் அவள்வயினான.

இதுவும் அது.

தோழி  வழிமொழிந்து  முயலுங்காலத்து  அவன்  நினைவின்கட்
படுந்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து என்றவாறு.

அஃதாவது , `இன்னுழிச்  செல்'  எனவும்  `இன்னுழி வா'  எனவும்,
தலைவியை  ஆயத்துணின்றும்  பிரித்துத்  தனி  நிறுத்திப்  பட்டாங்கு
கூறியும் பிறவாற்றானும் ஆராய்ந்து கூட்டுதல்.

இவ்வைந்து சூத்திரத்தானுந் தோழிக்கு உரிய மரபு உணர்த்தியவாறு
காண்க.                                                (39)

128. குறியெனப் படுவ திரவினும் பகலினும்
அறியக் கிடந்த ஆற்ற தென்ப.

என்றது,  மேல்  `களஞ்சுட்டுக்   கிளவி  கிழவியதாகும்'  என்றார்.
அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

குறி என்று சொல்லப்படுவது இரவினானும்  பகலினானும்  இருவரும்
அறியச் சொல்லப்பட்ட இடத்தை யுடைத்து என்றவாறு.

எனவே,  இரவிற்குறி  பகற்குறி  என   இருவகைப்படும்   என்பது
கொள்ளப்படும்.                                          (40)

129. இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.

என்றது, இரவுக் குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று.

இரவுக்குறியாம் இடமே  இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண்
மனையோர் கிளவிகேட்கும் அணிமைத் தாம் என்றவாறு.

எனவே,    மனைக்கும்    எயிற்கும்   நடுவணதோரிடம்   என்று
கொள்ளப்படும்.                                          (41)

130. பகற்புணர் களனே புறனென மொழிப
அவளறி வுணர வருவழி யான.

என்றது, பகற்குறி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பகற்குறியாகிப்  புணருமிடம்   எயிற்புறன்   என்று    சொல்லுவர்;
ஆண்டுந் தலைமகள் அறிவிற்றுவரும் இடனாகல் வேண்டும் என்றவாறு.
                                                      (42)

131. அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே
அவன்குறி1 மயங்கிய அமைவொடு வரினே.

இதுவுமது.

அல்லகுறிப்படுதலுந்   தலைமகட்கு   உரித்து;   தலைவன்  செய்த
குறிமயங்கிய பொருத்தத்தொடு வரின் என்றவாறு.

உதாரணம் மேற்காட்டப்பட்டது.

மயங்கிய     அமைவு    ஆவது    -    அவன்      செய்யும்
குறியோடமைவுடையன.                                    (43)

132. ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே
ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான.

இதுவுமது.

அவ்வவ்விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவிமாட்டு உண்டு, ஓங்கிய
சிறப்பினையுடைய ஒருபக்கத்து என்றவாறு.

ஒரு     சிறையென்றது  மனத்தானும்  மொழியானும்  மெய்யானும்
கற்புடை  மகளிர்   ஒழுகும்    ஒழுக்கத்தின்   மனத்தான்   ஒழுகும்
ஒழுக்கமும் உண்டு என்றவாறு.                             (44)

133. மறைந்த ஒழுக்கத் தோரையும் நாளுந்
துறந்த ஒழுக்கங் கிழவற் கில்லை.

என்றது, தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

களவொழுக்கத்து  முகுர்த்தமும்  நாளும் துறந்தொழுகும்  ஒழுக்கம்
தலைவற்கு இல்லை என்றவாறு.

என்றதனான், ஆண்டு அறத்தின் வழுவினானல்லன் தலைவிமாட்டுத்
தலையளி குறைதலான் என்றவாறு.                          (45)

134. ஆறின தருமையும் அழிவும் அச்சமும்
ஊறும் உளப்பட அதனோ ரற்றே.

இதுவுமது.

நெறியினது அருமையும் மனன் அழிவும் அஞ்சுதலும்  இடையூறும்
தலைவன்மாட்டு நிகழா என்றவாறு.                          (46)

135. தந்தையுந் தன்னையும் முன்னத்தின் உணர்ப.

என்றது, தந்தையும், தன்னையரும் களவு உணருமாறு  உணர்த்துதல்
நுதலிற்று.

தந்தையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு.

எனவே, கூற்றினான் உரைக்கப் பெறார் என்றவாறாம்.        (47)

136. தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும்.

என்றது, நற்றாய்க்கு உரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று.

நற்றாய்  களவொழுக்கம்  அறிவுறுத்தல்   செவிலியோ  டொக்கும்
என்றவாறு. செவிலி   கவலுந்துணைக்  கவலுத  லல்லது தந்தையையும்
தன்னையன்மாரையும்போல வெகுடலிலள் என்றவாறு.