உறுதற்கருமையாற் பிறபிற
பெண்டிர் ஏதுவாக ஊடல்
உணர்த்தற்கண்ணும் என்றவாறு.
"புனவளர் பூங்கொடி யன்னாய்"
என்னும் மருதக் கலியுள்,
"ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன்
தண்தார் அகலம் புகும்"
[கலி.92]
எனப் பிறபிற பெண்டிரைக் காட்டித்
தலைவன் ஊடலுணர்த்தியவாறு
அறிந்து கொள்க.
பிரிவினெச்சத்துப்
புலம்பிய விருவரைப் பரிவு
நீக்கிய
பகுதிக்கண்ணும் என்பது - பிரிவு நிமித்தமாக
வருந்திய மனையாளையும்
காமக் கிழத்தியையும் அவ் வருத்தத்து
நின்று நீக்கிய பகுதிக்கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு; அஃதாவது பிரிவேன் என்றல்.
"பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகமலிந்து யானும்
அறநிலை பெற்றோர் அனையேன் அதன்தலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலனே நினையின்
யாதனிற் பிரிவாம் மடந்தை
காதல் தானுங் கடலினும் பெரிதே."
[நற்றிணை.166]
இக்கூற்று இருவர் மாட்டும் ஒக்கும்.
நின்றுநனி பிரிவின் அஞ்சியு பையுளும் என்பது - நிலைநிற்க
மிகப் பிரியும் பிரிவின்கண் அஞ்சிய நோயின்கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.
"ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற
நீளெரி பரந்த நெடுந்தாள் யாத்துப்
போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினை
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி
ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி
எருவைச் சேவல் கரிபுசிறை தீய
வேனின் நீடிய வேயுயர் நனந்தலை
நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியிற் புணர்வ தாயிற் பிரியாது
ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே."
(அகம்.51)
என வரும்.
சென்று கையிகந்து பெயர்த்துள்ளிய வழியும் என்பது - மேற்
கூறியவாறினைக் கையிகந்து முன்னொருகாற் சென்று மீட்டும்
அந்நெறியினைப்போக நினைந்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.
"இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்றிளைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇ
மான்றுவேட் டெழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதி யுவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தங்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கு ஞான்றே."
(அகம்.3)
என வரும்.
காமத்தின் வலியும் என்பது -
பொருளினுங் காமம் வலியுடைத்து
என உட்கொண்ட வழியும் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே."
(குறுந்.101)
என வரும்.
கைவிடின் அச்சமும் என்பது - தலைவியைக்
கைவிட்டவழி அவளது
உயிர்ப்பொருட்டு அஞ்சுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல்
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை ஒண்ணுதல்
வினை தலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை யதர
பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதி ராயின் அறத்தாறு
அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக வென்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள்
|