நடுங்கஞர் எவ்வங் களைந்த எம்மே".
(குறுந்.354)
எனவும்,
"என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியுந்
தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணியென இழிதரும் அருவிப் பொன்னென
வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடுமழை கிழிக்குஞ் சென்னிக்
கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே.
(நற்றிணை-28)
எனவும்,
"மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்ல னென்னும்என் தடமென் தோளே." (ஐங்குறு-11)
எனவும்,
"வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு."
(குறள்.1193)
எனவும் வரும்.
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்துக்கு என்பது - தலைவிக்கு
இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும்
வழியும் கூற்று நிகழும்
என்றவாறு.
உதாரணம்
"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு." (குறள்.1152)
எனவும்,
"குக்கூ என்றது கோழி அதனெதிர்
துட்கென் றற்றென் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே." (குறுந்.157)
எனவும் வரும்.
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளிவரு நிலையும் என்பது - புதல்வன் றோன்றிய
நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சுபுண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு.
உதாரணம்
"கரும்புநடு பாத்திக் கதிர்த்த ஆம்பல்
சுரம்புபசி களையும் பெரும்புனல் ஊர
புதல்வனை யீன்றவெம் மேனி
முயங்கல்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே."
(ஐங்குறு.65)
என வரும்.
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி
இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து
மருங்கினும் என்பது - விருப்பமுடைய
உள்ளத்தோடே
புகுவோரது நலத்தின் பொருட்டு அகன்ற கிழவனைத் தனது தனிமை
மிகவுங் காட்டி அவன்மாட்டுச்
செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு
அருகப்பண்ணி அவன் காதலித்தாளை
எதிர்பெய்துகொண்டு
புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும்.
ஈரமாவது முற்றும் மறாமை.
"கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்
களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கில்
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை
முறுவல் முகத்திற் பன்மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற் றள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்துதன்
ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர
மனைநகு வயலை மரனிவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலோ டார்தழை தைஇ
விழவாடு மகளிரொடு தழுவணிப் பொலிந்து
மலரேர் உண்கண் மாணிழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி எம்போல்
புல்உளைக் குடுமிப் புதல்வற்பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய
என்ன கடத்தளோ மற்றே தன்முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி
வடித்தென உறுத்த தித்தப் பல்லூழ்
நொடித் தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே."
(அகம்.176)
என வரும்.
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும்
என்பது - பிறள்மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக்
கிழவனைத் தாழ்ந்து
எங்கையர்க்கு உரையென வேண்டிக்
கோடற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.
`அகன்றுறை' என்னுங் கலியுள்,
"நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருமதின்
ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாது சேர்ந்து
இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்
..........................................
....................................................
மண்டுநீர் ஆரா மலிகடல் போதுநின்
தண்டாப் பரத்தை தலைக்கொள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில்
தோலாமோ நின் பொய் மருண்டு."
(கலித்.73)
எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும்,
எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறியவாறும் காண்க.
"நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே
நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டு நீ யருளாது ஆண்டுறை தல்லே." (ஐங்குறு.49)
இதுவும் அது.
செல்லாக் காலைச் செல்கென
விடுத்தலும் என்பது - தலைவன்
போகாத காலத்துப் போவெனக் கூறுதலும் என்றவாறு.
உதாரணம்
"பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே
|