இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   108
Zoom In NormalZoom Out


 

அவர்வயிற் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."              (கலித். 79)

என வரும்.

காமக்   கிழத்தி  தன்மகத்  தழீஇ  ஏமுறு  விளையாட்டு  இறுதிக்
கண்ணும் என்பது  -  காமக் கிழத்தி  தலைவி  மகவைத் தழீஇ ஏமுற்ற
விளையாட்டின் இறுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவருங்
காணுநர் இன்மையிற் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங்கு இளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமக ளெவன்பே துற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்து
அணங்கருங் கடவுள் அன்னோன் நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே."        (அகம்.16)

என வரும்.

சிறந்த செய்கை  யவ்வழித் தோன்றி  யறம்புரி  நெஞ்சமொடு  தன்
வரவறியாமை  புறஞ்செய்து  பெயர்த்தல்  வேண்டிடத்  தானும் என்பது
- சிறந்த   செய்கையினையுடைய  அவ்விடத்துத்  தலைவன்  தோன்றி
அறம்புரி நெஞ்சத்தோடே  தனது வரவைத் தலைவி யறியாளாக  நின்று
தலைவியைப்   புறஞ்செய்து    அவள்    மாட்டுளதாகிய   ஊடலைப்
பெயர்த்தல்  வேண்டின  இடத்தும் தலைவிமாட்டுக்   கூற்று   நிகழும்
என்றவாறு.

அவ்வழி என்றது  - தலைவியுங் காமக் கிழத்தியைப் போலத்  தன்
மகனைக்கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு.

`மையற விளங்கிய' என்னும் மருதக் கலியுள்,

"பெரும விருந்தொடு கைதூவா வெம்மையும் உள்ளாய்
பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள் யாம்கேட்ப
மருந்தோவா நெஞ்சிற் கமழ்தமயின் றற்றாப்
பெருந்தகாய் கூறு சில."

எனவும்,

"எல்லிழாய்
சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே
வாயோடி ஏனாதிப் பாடியும் என்றற்றாம்
நோய்நாந் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட
ஓவா தடுத்தடுத்தத் தத்தாஎன் பான் மாண
வேய்மென்தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்றிவன்
வாயுள்ளிப் போகான் அரோ."

எனவும்,

"உள்ளி உழையே ஒருங்கு படைவிடக்
கள்வர் படர்தந் ததுபோலத் தாம்எம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு."                (கலித்.81)

எனவும், இவ்வாறு வரும்.

தந்தையர்  ஒப்பர்   மக்கள்   என்பதனால்,  அந்தமில்  சிறப்பின்
மகப்பழித்து  நெருங்கினும் என்பது  -   தந்தையரை  மக்கள்  ஒப்பர்
என்பதனால்  அந்தமில்லாத  சிறப்பினையுடைய  மக்களைப்  பழித்தற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

`மைபடு சென்னி மழகளிற் றோடை' என்னும் மருதக்கலியுள்,

"வீதல் அறிய விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதன் மாட்டொத்தி பெருமற் றொவ்வாதி
மாதர்மெல் நோக்கின் மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்."                (கலித்.86)

என வரும்.

கொடியோர் கொடுமை  சுடும் என ஒடியாது  நல்லிசை  நயந்தோர்
சொல்லொடு   தொகைஇப்   பகுதியின்   நீங்கிய   தகுதிக்  கண்ணும்
என்பது - கொடியாரது   கொடுமை   சுடாநின்றதெனப்   புணர்ச்சியை
ஒடியாது    புகழை     விரும்பினோர்   சொல்லோடே   ஒருப்பட்டு
வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு.

அஃதாவது,   அக்காலத்துத்   தக்கறிதல்,  புகழை   விரும்பினோர்
சொல்லும் சொல்லாவது,  காமம்  விரும்பும்  பரத்தையரைப்  போலாது
அறத்தை விரும்புதல்.

உதாரணம்

`யாரிவனெங் கூந்தல்' என்னும் மருதக் கலியுள்,

"மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப்
பொய்ப்ப விடேஎ மென நெருங்கில் தப்பினேன்
என்றடி சேர்தலு முண்டு"                   (கலித்.89)

என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னீங்கிய தகுதி.

பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது வந்தவழிக் காண்க.

"கொடுமை   யொழுக்கங்   கோடல்   வேண்டி  யடிமேல் வீழ்ந்த
கிழவனை   நெருங்கிக்  காத  லெங்கையர்  காணின்  நன்றென மாதர்
சான்ற   வகையின்கண்ணும்   என்பது   -   தலைவனது   கொடுமை
யொழுக்கத்தினைத்   தலைவியே   பொறுக்கவேண்டி    அவளடிமேல்
வீழ்ந்தவனை  நெருங்கி   நின்மாட்டுக்   காதலையுடைய   எங்கையர்
காணின் இப்பணிதல் நன்றாமெனக்   காதலமைந்த வகையின் கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.

`நில்லாங்கு நில்லா' என்னும்