மருதக் கலியுள்,
"நல்லாய் பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி ;
அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள
அளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும்
விளித்துநின் பாண்ணோ டாடி யளித்தி
விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும்
நடலைப்பட் டெல்லா நின்பூழ்."
(கலித்.95)
இதனுள் `கையொடு கண்டை பிழைத்தேனருள்' என அடிமேல் வீழ்ந்தவாறும், `அருளுகம் யாம்யாரேம்'
எனக் காதலமைந்தவாறும் `நீ நீக்கலின்
நின் பூழெல்லாம் நடலைப்பட்டு
நோய்பெரிதேய்க்கும்'
அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்துவிடும்
எனவும், இப் பணிதல் நின் பெண்டிர்க்கு
நன்றாகுமே எனவும்
கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை.
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை
உள்ளியவழியும் என்பது - தாயரைக் கிட்டிய நல்ல அணியையுடைய
புதல்வனை மாயப் பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் என்றவாறு.
புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, தலைவன் புறப் பெண்டிர்
மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச்
சென்றவழி வெகுளல். கண்ணிய நல்லணி யெனவே அவர் கொடுத்த நல்லணி
யென்பது பெறுதும். பரத்தைமை உள்ளாதவழி இவன் மாட்டுக் குறிப்பு
நிகழாதாம். மாயமென்பது பரத்தைக்குப்
பண்பாகி இனஞ்
சுட்டாது வந்தது.
உதாரணம்
"உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்
நறுவடி யாரிற் றவைபோ லழியக்
கரந்தியான் அரக்கவுங் கைநில்லா வீங்கிச்
சுரந்தஎன் மென்முலைப் பால்பழு தாகநீ
நல்வாயிற் போத்தந்த பொழுதினான் எல்லாக்
கடவுட் கடிநகர் தோறும் இவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
ஈரமி லாத இவன்தந்தை பெண்டிருள்
யாரில் தவிர்ந்தனை கூறு;
நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணூஉ
இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண் டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென் றகநகர்
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தம் கலங்களுட் கையுறை என்றிவர்க்கு
ஒத்தவை ஆராய்ந் தணிந்தார்; பிறன் பெண்டிர்,
ஈத்தவை கொள்வானாம் இஃதொத்தன் சீத்தை
செறுதக்கான் மன்ற பெரிது,
சிறுபட்டி, ஏதிலார் கைஎம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு;
அவற்றுள், நறாஇதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுறாவே றெழுதிய மோதிரம் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி என்றுஞ்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை ;
அன்னையோ, இஃதொன்று;
முந்தை கண்டும் எழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந் தற்றா இஃதொன்று
தந்தை இறைத்தொடி மற்றவன் தன்கைக்கண்
தந்தாரியார் எல்லா இது;
என்னெத்துக் காண்க பிறரும் இவற்கென்னும்
தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை
இதுதொடு கென்றவர் யார்;
அஞ்சாதி, நீயுந் தவறிலை நின்கை இதுதந்த
பூவெழில் உண்கண் அவளுந் தவறிலள்
வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேனின்றும் எள்ளி இதுஇவன் கைத்தந்தாள்
தானியாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடை யேன்."
(கலித்.84)
என வரும்.
தன்வயிற் சிறப்பினும் அவன் வயிற்
பிரிப்பினும் இன்னாத்
தொல்சூள் எடுத்தற்கண்ணும் என்பது - தன்மாட்டு நின்ற மிகுதியானும்
அவன்மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத
பழைய சூளுறவைத்
தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.
தலைமகள் மாட்டு மிகுதியாதோ வெனின்
"மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய." (பொருளியல்.32)
என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம்.
“தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறாஞ்சிப் போர்மயங்கி
நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு."
(கலித்.89)
என வரும்.
காமக் கிழத்தி நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும்
பொருளின்கண்ணும் என்பது - காமக் கிழத்தி
நலத்தினைப் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
நலம் பாராட்டுவாள் தலைவி அவள் பாராட்டுதல் தீமை பற்றி
வருதலான், அதனாற் சொல்லிமுடிப்பது பிறபொருளாயிற்று.
உதாரணம்
"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே."
(ஐங்குறு.122)
இதனான், அவள் மிக்க இளமைகூறித் தலைவனைப் பழித்தாளாம்; ஒருமுகத்தாற் புலந்தவாறு.
|