இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   117
Zoom In NormalZoom Out


 

றித்  தழீஇய மனைவியைக்  காய்வின்  றவன்வயிற் பொருத்தற்கண்ணும்
என்பது  - காதற் சோர்வினாலும் ஒப்புர வுடைமை யானுந் தாய் போற்
கழறிப் பொருத்தப்பட்ட மனைவியைக் காய்தலன்றித் தலைமகன்மாட்டுப்
பொருத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

இதுவும் அவள் கூற்று. காதல் சோர்வு என்பது தன்மாட்டுக்  காதல்
சோர்தல். இது தலைமகன் மாட்டுத் துனியுளவழி நிகழும் நிகழ்ச்சி.

உதாரணம்

"வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்விடு நடைப்பக டாரும் ஊரன்
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற்
கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே
நீயே பெருநலத் தகையே அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்
வண்டென மொழிப மகனென் னாரே."     (நற்றிணை.290)

இது காமக்கிழத்தியாகிய தலைமகட்கு முன் வரையப்பட்ட பரத்தை
கூற்று.

இன்னகைப்  புதல்வனைத்  தழீஇ  யிழையணிந்து  பின்னை  வந்த
வாயிற்  கண்ணும்  என்பது  -  இனிய  நகையையுடைய  புதல்வனைத்
தழீஇ இழையணிந்து  பின்னை வந்த  வாயிலின்  கண்ணும் என்றவாறு.
பின்னை   என்றதனால்  ஏனைய  வாயில்களை  மறுத்த  வழியென்று
கொள்க.

"புள்இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெ லிடைப்பூத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன்
வள்ளிதழ் உறநீடி வயங்கிய ஒருகதிர்
அவைபுக ழரங்கின்மே லாடுவாள் அணிநுதல்
வகைபெறச் செரீஇய வயந்தகமே போல்தோன்றும்
தகைபெறு கழனியந் தண்துறை யூரகேள்;
அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவல் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ;
புல்லல்எம் புதல்வனைப் புகலகல் நின்மார்பின்
பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானாள்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினாற் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டான் காய்குவள் அல்லளோ;
எனவாங்கு,

பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே யவர்வயின் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."                (கலித்.79)

என வரும்.

மனையோன்  ஒத்தலின்  தன்னோரன்னோர்  மிகையெனக்  குறித்த
கொள்கைக்  கண்ணும் என்பது  -  தான்  மனையாளை  ஒத்தலாற்றன்
போல்வார் தலைவற்கு  மிகையெனக் குறித்த கோளின்கண்ணும்  கூற்று
நிகழும் என்றவாறு.

உதாரணம்

"அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉந்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயின்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட்டியானை நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே."                 (குறுந்.91)

என வரும்.

எண்ணிய பண்ணை யென் றிவற்றோடு  என்பது  -  எண்ணப்பட்ட
விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவற்றோடென்றவாறு.

விளையாட்டாவது ஆறுங் குளனுங் காவும் ஆடுதல்.

உதாரணம்

"கூந்தல் ஆம்பல் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம்ஃ தயர்கம் சேறுந் தானஃ
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு நுகர்கதன் கொழுநன் மார்பே."    (குறுந்.80)

பிறவும்  என்றதனால்  தலைமகட்குரித்தாகச்  சொல்லப்பட்டவற்றுள்
ஒப்பன கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:-

"ஞாலம் வறந்தீர" என்னும் மருதக் கலியுள்,

"அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்"

எனவும்,

"வழிமுறை தாயுழைப் புக்கான்"

எனவும்,

"தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கான்"             (கலித்.82)

எனவும்,

கூறுதலிற்   புதல்வனை    யீன்றாள்    மூன்றாங்    காமக்கிழத்தி
யாயினவாறும்  இவன்மாட்டுத்     தாயர்    கண்ணிய     நல்லணிப்
புதல்வனைமாயப்  பரத்தை   யுள்ளிக்   கூற்றுநிகழ்ந்தவாறுங்   கண்டு
கொள்க. பிறவும் அன்ன. தோழி கூற்றும் இவட்கு ஒக்கும்.        (10)

150. கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.