துணிந்தவழிச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை: அன்மைத் தன்மையைச் சொல்லுதலும் உரித்து, ஐயத்திற்கு வேறாய்த் துணிபொருளிடத்து என்றவாறு.
ஒருத்தி யெனத் துணிந்தவழி, ‘ஒருவனல்லன் ஒருத்தி’ எனவரும் ; ஒருவன்
எனத் துணிந்தவழி, ‘ஒருத்தியல்லன் ஒருவன்’ எனவரும். இஃது உயர்திணைப் பாலையத்துக்கண் துணிபு தோன்றினவழிச் சொல் நிகழுமாறு. மற்றையனவும் அன்ன.
இனி, ஒருவன், ‘வேறிடம்’ என்பதனைத், ‘துணியப்படும்பொருட்கு வேறாகி நிற்கும் பொருள்’ என்னும் அவன் உதாரணங் காட்டுமாறு : ‘குற்றிகொல்லோ? மகன்கொல்லோ?’ என ஐயமுற்றான், மகன் என்று துணியின், ‘குற்றியன்று மகன்’ எனவும், குற்றி என்று துணியின், ‘மகன் அல்லன் குற்றி’ எனவும் வரும், என்னும்.
இனி, அல்லாத தன்மையையுடையது துணியப்படும் பொருளன்றே, அதனான், அதன்கண்ணே அன்மையை வைத்துச் சொல்லுப என்ப, முன்னையுதாரணங் காட்டுவார். ‘குற்றியல்லன் மகன்’ என்புழிக், ‘குற்றியின் அல்லன்’ என்று, ஐந்தன் உருபு விரித்து உரைக்க. (25)
26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதுவும் ஒரு சொல்லுதல் வன்மை யுணர்த்துதல் நுதலிற்று.
உரை: அடை, சினை, முதல் எனப்பட்ட மூன்றும் முறை மயங்காது வருவன வண்ணச் சினைச்சொல் என்றவாறு.
அடை என்பது ஒரு பொருளது குணம்.
சினை என்பது உறுப்பு.
முதல் என்பது அவ்வுறுப்பினை யுடையன.
வரலாறு : பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை என வரும்.
அடை சினை முதல் என வரூஉ மூன்றும் -- என்னாது, முறை என்றதனான் இருகுணம் அடுக்கி முதலொடு வருதலும், இருகுணம் அடுக்கிச் சினையொடு வருதலும் கொள்க.
‘முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல்
சினையோ டடுக்கல் செய்யு ளாறே’
என்பது புறச் சூத்திரம். *
உதாரணம் -- இளம் பெருங் கூத்தன் என வரும் வழக்கினுள்.
‘சிறுபைந் தூவிச் செங்காற் பேடை’ (அகம் - 57)
என வரும் செய்யுட்கண்.
‘இளம் பெருங் கூத்தன்’ -
|