இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1184
Zoom In NormalZoom Out


அம்முறையே     முறை  ;  ஈற்ற  என்பது   இவ்   விளிவேற்றுமை
ஈறாகவுடைய  என்றவாறு.  அவைதாம் என்பது மேற் சொல்லப்பட்டன
என்றவாறு. (3)

66.  அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,   நிறுத்த  முறை  யானே
முதற்கண் நின்ற பெயர்வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. 

உரை  :  எழுவாய் வேற்றுமைப்பெயர்  முதல்  வேற்றுமைப்பெயர்
என்றவாறு. 

இனித்   ‘தோன்றுநிலை’ என்றதனால், மேற்சூத்திரத்துக் கூறப்படும்
அறுவகைப்    பயனிலையும்    தோன்ற   நிற்கும்பெயர்   எழுவாய்
வேற்றுமையாவது என்றவாறாம். 

என்னை, ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி, ஆயன் என்பதூஉம்
பெயர்,   சாத்தன்  என்பதூஉம்  பெயர்  ;  ஆயினும்,  இரண்டிற்கும்
இரண்டு  பயனிலை  தோன்ற  நில்லாமையாற்  சாத்தன்  என்பதூஉம்
வந்தாம்  என்பதூஉம்  ஆயன்  என்பதற்கே  பயனிலை  ; அதனால்,
சாத்தன் என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமையாயிற்று என்பது. 

இனி,  பெயரை  எழுவாய் வேற்றுமை  யென்றும்  விளிவேற்றுமை
யென்றும்    உரைத்தீரால்,   இரண்டனுக்கும்   தம்முள்   வேற்றுமை
யென்னெனில்,  ஈறு  திரியாது  உருபேற்றல்  எழுவாய் வேற்றுமையது
இலக்கணம்  ;  ஈறு திரிந்து உருபேற்றல் விளிவேற்றுமைய திலக்கணம்
என்பது அறிக. (4) 

67.  பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்
றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ    வெனின்,   மேற்சொல்லப்பட்ட
எழுவாய்  வேற்றுமை  என்பது  இவ்  வறுவகைப்பட்ட  பயனிலையும்
ஏற்பது என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

‘ஆ உண்டு’ என்பது பொருண்மை சுட்டல்.

‘ஆ செல்க’ என்பது வியங்கொள் வருதல்.

‘ஆ கிடந்தது’ என்பது வினைநிலை யுரைத்தல்.

‘ஆ எவன்?’ என்பது வினாவிற் கேற்றல்.

‘ஆ கரிது’ என்பது பண்புகொள வருதல்.

‘ஆ பல’ என்பது பெயர்கொள வருதல். 

இவை எல்லாம் பெயர்வேற்றுமைப் பொருள் என்பது. 

‘அன்றி  அனைத்தும்’  என்பது  அத்துணைப்  பொருள்  எல்லாம்
என்றவாறு. (5) 

68. பெயரி னா