வேற்றுமையியல்
வேற்றுமையின் தொகை
63. வேற்றுமை தாமே ஏழென மொழிப.
என்பது சூத்திரம். இவ்வோத்து, செயப்படு பொருள் முதலியனவாகப்
பெயர்ப்பொருளை வேறுபடுத்து உணர்த்தலின், வேற்றுமை ஒத்து என்று
காரணப்பெயர் பெற்றது. முன்னர் நான்கு சொற்கும் பொது இலக்கணம்
உணர்த்திய அதிகாரத்தானே இப்பொதுஇலக்கணம் கூறுகின்ற
ஓத்தினையும் சேரக்கூறினார். ‘அப்பொது இலக்கணம் என்னை?’ எனின்,
வேற்றுமை தாமும் பெயரும் ஒருசார் வினைச்சொல்லும் இடைச்
சொல்லும் உரிச்சொல்லுமாகிய பொது இலக்கணமாதல் உடைமையானும்,
‘எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே’ (66) எனவும், ‘அன்றி
அனைத்தும் பெயர்ப்பய னிலையே’ (67) எனவும், ஈறுபெயர்க்காகும்
இயற்கைய என்ப’ (70) எனவும், ‘பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா’
(71) எனவும் தொழிற்பெயர் காலந் தோன்றும் (71) எனவும் மேற்கூறுஞ்
சிறப்புடைப் பெயர்க்குப் பொதுஇலக்கணம் ஈண்டுக் கூறுதல்
உடைமையானும் இவ்வோத்துப் பொதுஇலக்கணமே கூறியதாயிற்று.
‘ஆயின், வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் இடை வைத்தது
என்னை?’ எனின், இவ்வேற்றுமையின் மயக்கம் யாப்புடைமையின் வேறு
ஓத்தாக்கி, விளி இவைபோற் சிறப்பின்மையின் வேறோர் ஓத்தாக்கி
வைத்தார். இங்ஙனம் வைத்துப் பின்னர்ச் சிறந்த பெயர் வினை இடை
உரிகளை முறை
|