நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   550
Zoom In NormalZoom Out


வறுபடுத்தலும், பெருமையைச் சுருக்குதலும்.  நெல்லைத் தொகுக்கும்,
வேலியைப் பிரிக்கும் - இவற்றிற்கு  வேறுபாடு, விரிந்தது தொகுத்தலும்
தொகுத்தது விரித்தலும்;  அறத்தை  ஆக்கும்,  நாட்டைச்  சிதைக்கும்-
இவற்றிற்கு   வேறுபாடு,   மிகுத்தலும்    கெடுத்தலும்;   இவ்வெட்டும்
வேறுபடுக்கப்படுவன. 

ஊரைக் காக்கும்,  தந்தையை  ஒக்கும்,  தேரை ஊரும், குரிசிலைப்
புகழும்,  நாட்டைப்  பழிக்கும்,  புதல்வனைப்  பெறும்,  மனைவியைக்
காதலிக்கும்,  பகைவரை  வெகுளும்,  செற்றாரைச்  செறும்,  நட்டாரை
உவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை  அளக்கும்,
அடைக்காயை  எண்ணும்,   ஊரைச்  சாரும்,   நெறியைச்   செல்லும்,
சூதினைக்  கன்றும், கணையை  நோக்கும்,  கள்ளரை  அஞ்சும் எனப்
பத்தொன்பதும் எய்தப்படுவன. 

இவை தாந்  தொழிலுறுவனவும் தொழிற்பயன் உறுவனவுமாய் வரும்
வேறுபாடும்  உணர்க. வெகுடலுஞ்  செறலுங்  கொலைப்பொருளாயவழி
வேறுபடுக்கப்படுவன.  செறல்,  வெகுளியது காரியம்; உவத்தல், காதலது
காரியம். 

இனிச்  செய்வான்  கருத்து  இல்வழி நிகழுஞ் செயப்படுபொருளும்,
செய்வானுஞ் செயப்படுபொருளுந் தானேயாய் நிற்பனவுங் கொள்க. 

(எ-டு.) சோற்றைக்  குழைத்தான்,  சாத்தன் தன்னைக்  குத்தினான்
என வரும். 

இன்னும் இச்செயப்படுபொருள் தன்கண் தொழில் நிகழ்ந்தும் நிகழா தும்