எ-று.
(எ-டு.) ‘கிளையரில் நாணற் கிழங்குமணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ (அகம். 212: 4,5) என்புழி ‘மணலுள் ஈன்ற’ என ஏழாவதன் பொருள் ஆயிற்று. கொக்கினுக் கொழிந்த தீம்பழம் கொக்கின்’ (நற். 280) என்புழி ‘கொக்கினின்றும்’ என ஐந்தாவதன் பொருளாயிற்று.
முற்கூறிய எல்லாந் தம்முள் இயைபுடைய உருபு மயக்கமே மயங்கு மாறு கூறி, இஃது ஓர் இயைபுமில்லாத உருபு மயக்கமே கூறிற்று என்று உணர்க. (23)
எதிர்மறைக்கண்ணும் வேற்றுமைப்பொருள் திரியாமை
108.
எதிர்மறுத்து மொழியினுந் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.
இது, வேற்றுமைகள் தம் பொருள் மாறுபட்டுழியும் அப்பொருள என்கின்றது.
(இ-ள்.) எதிர் மறுத்து மொழியினும்-விதி முகத்தான் கூறாது எதிர் மறுத்துக் கூறினும், தத்தம் மரபின் பொருள் நிலை திரியா - தத்தம் இலக்கணத்தான் வரும் பொருள் நிலை திரியா, வேற்றுமைச் சொல்லே-வேற்றுமை உருபுகள், எ-று.
(எ-டு.) மரத்தைக் குறையான்,வேலான் எறியான் என வரும். வினை நிகழாமையின், மரமும் வேலும் செயப்படுபொருளும் கருவியும் ஆகா வேனும், எதிர்மறையும் விதிவினையோடு ஒக்கும் என ஆணை கூறிற்று. (24)
அவ்வுருபுகளுள் சில செய்யுளுள் திரிதல்
109.
குஐ ஆன்என வரூஉம் இறுதி
அவ்வொடு சிவணுஞ் செய்யு ளுள்ளே.
இஃது அவ்வுருபுகளுள் சில செய்யுளுள் திரியும் என்கின்றது.
கு ஐ ஆன் என வரும்
இறுதி-கு ஐ ஆன் என வரும்
மூன்று உருபும் தொடர் இறுதிக்கண் நின்றவழி, அவ்வொடும் சிவணும்
செய்யுளுள்ளே-அகரத்தொடு பொ
|