நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   591
Zoom In NormalZoom Out


தொடி’  என்று  அளவும்  நிறையுமாகிய   பெயர்  கூறப்படுதலின்,
அவற்றை ஆகுபெயரென்றார். 

‘ஒன்று’     என்னும்  எண்ணுப்பெயரான்  அவ்வெண்ணப்படும்
பொருளைக்  கூறுவதற்கு  முன்னும் அப்பொருள் ஒன்றாயே நிற்றலின்,
எண்ணுப் பெயரை ஆகுபெயரொடு கூறாராயினார். (34) 

ஆகுபெயர்க்குப் புறனடை

119. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.
 

இஃது, ஆகுபெயர்க்குப் புறனடை. 

(இ-ள்.) கிளந்த    அல்ல    வேறு    பிற    தோன்றினும்   -
சொல்லப்பட்டனவே    அன்றி     வேறு     பிற    சொற்கண்ணே
ஆகுபெயர்த்தன்மை தோன்றினும், கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர்
கொளலே-சொல்லப்பட்டவற்றது இயல்பான் உணர்ந்து கொள்க, எ-று. 

(எ-டு.) யாழ்,  குழல்  என்னும்  கருவிப் பெயர், ‘யாழ் கேட்டான்;
குழல்  கேட்டான்,’  என்று  அவற்றான்  ஆய ஓசை மேலும்; யானை,
பாவை  என்னும்  உவமப் பெயர், ‘யானை வந்தான்; பாவை வந்தாள்,’
என   உவமிக்கப்படும்   பொருள்மேலும்;   ஏறு,   குத்து   என்னுந்
தொழிற்பெயர்,   ‘இஃது   ஓர்   ஏறு;   இஃது   ஒரு   குத்து,’  என
அத்தொழிலானாய    வடுவின்   மேலும்;   நெல்லாதல்   காணமாதல்
பெற்றானொருவன்,  ‘சோறு  பெற்றேன்,’ எனக் காரணப் பொருட்பெயர்
காரியத்தின்மேலும் ஆகுபெயராய் வந்தன. 

‘ஆறு அறி அந்தணர்’   (கலி.1:1)   என்புழி,   ‘ஆறு’   என்னும்
வரையறைப்  பண்புப்  பெயர்  அப்பண்பினை உடைய அங்கத்தினை
உணர்த்தி  நிற்றலும்,  ‘நூற்றுலாம்  மண்டபம்’  (சீவக. 2734) என்புழி,
அவ்வெண்ணுப்  பெயரினை  அறிகுறியாகிய  அலகு நிலைத் தானமும்
அப்பெயரதாய்    நிற்றலும்,    அகரம்    முதலிய    எழுத்துக்களை
உணர்த்துதற்குக்  கருவியாகிய  வரி  வடிவுகளும்  அப்பெயர்  பெற்று
நிற்றலுங் கொள்க. 

கடி சூத்திரஞ் செய்ய இருந்த பொன்னைக் ‘கடி சூத்திரம்’ என்றும்,