நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   593
Zoom In NormalZoom Out


விளிமரபு

விளியின் பொது இலக்கணம்

120. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப.
 

என்பது  சூத்திரம்.  இது,  நிறுத்த முறையானே விளி உணர்த்துதலின்,
இவ்வோத்து  விளிமரபு  என்னும்  பெயர்த்தாயிற்று. இச்சூத்திரத்தான்
விளியது பொதுஇலக்கணங் கூறுகின்றார். 

(இ-ள்.) விளி எனப்படுப-விளி என்று சொல்லப்படுவன, கொள்ளும்
பெயரொடு-தம்மை ஏற்கும் பெயரொடு, தெளியத் தோன்றும் இயற்கைய
என்ப-விளங்கத்   தோன்றும்  இயல்பினை  உடைய  என்று  கூறுவர்
ஆசிரியர், எ-று. 

ஈறு  திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்து அடைதலும், இயல்பு
ஆதலும்  என்னும் வேறுபாட்டாற் ‘படுப’ என்றார். ‘கொள்ளும் பெயர்’
எனவே, கொள்ளாப் பெயரும் உளவாயின. ‘இயல்பாய் விளி ஏற்பனவுந்
தெற்றென விளங்கும்,’ என்றற்குத் ‘தெளியத் தோன்றும்’ என்றார். (1) 

121. அவ்வே,
இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.
 

இஃது, அப்பெயர்களைக் கூறுவல் என்கின்றது. 

(இ-ள்.) அவ்வே இவ் என அறிதற்கு - விளி கொள்ளும் பெயரும்
கொள்ளாப்  பெயரும்  இவை  என மாணாக்கன் உணர்தற் பொருட்டு,
மெய்பெறக்   கிளப்ப-பொருள்   பெற   எடுத்த   ஓதுவர்  ஆசிரியர்.
(அதனான், யானும் அம்முடிபே கூறுவல்), எ-று. (2) 

விளி ஏற்கும் உயர்திணை உயிரீறுகள்

122. அவைதாம்,
இஉ ஐஓ என்னும் இறுதி
அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.
 

இஃது, உயர்திணைப் பொருள் விளி ஏற்பன இவை என்கின்றது. 

(இ-ள்.)   அவைதாம்   -   கிளக்கப்படுவனவாகிய    பெயர்தாம்
(எண்வகைய;   அவற்றுள்)   உயர்திணை  மருங்கின்  மெய்ப்பொருள்
சுட்டிய விளிகொள் பெயர்-உயர்திணை