உரையசைக் கிளவிக்கு’ (எழுத். 34) என்றாற் போல, ‘எதிர்முக மாக்கும் சொல்லின் நீட்டம்’ என்று பொருள் உரைத்துக் கொள்க. (36)
உயர்திணைப்பெயருள் விளி ஏலாதவை
156.
தநநு எஎன அவைமுத லாகித்
தன்மை குறித்த னரளவென் இறுதியும்
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.
இஃது, உயர்திணைப்பெயருள் விளியேலாதன கூறுகின்றது.
(இ-ள்.) த ந நு எ என அவை முதலாகி-த ந நு என்னும் உயிர்மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாக உடையவாய், தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் - ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற- ன ர ள என்னும் மூன்று புள்ளியை இறுதியாக உடைய சொல்லும், அன்ன பிறவும் பெயர் நிலை வரினே, அவைபோல்வன பிறவு மாகிய பெயராகிய நிலைமையை உடைய சொற்கள் வரின், விளியொடுகொளல் இன்மை வேண்டும்- மேல் விளி ஏற்கும் என்னப்பட்ட பெயரொடு கோடலை இல்லாமை வேண்டும் ஆசிரியன், எ-று.
(எ-டு.) தமன், தமர், தமள்; நமன், நமர், நமள்; நுமன், நுமர், நுமள்; எமன், எமர், எமள் எனவும்,
தம்மான், தம்மார், தம்மாள்; நம்மான், நம்மார், நம்மாள்; நும்மான், நும்மார், நும்மாள்; எம்மான், எம்மார், எம்மாள் எனவும் வரும்.
‘பிறவும்’ என்றதனான், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என வரும். ‘வேண்டும்’ என்றதனான், எம்பீ! ‘எம்மானே! தோன்றினாய் என்ன ஒளித்தியோ!’ (சீவக. 1801) என்றாற் போலச் சிறுபான்மை விளி ஏற்பனவும், ‘தமர்’ முத
|