பல்ல பல சில என்னும் பெயரும் - பல்ல, பல, சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், உள்ள இல்ல என்னும் பெயரும்-உள்ள, இல்ல என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், வினைப்பெயர்க் கிளவியும்-வருவது, வருவன என்றாற்போலும் வினைப்பெயராகிய சொற்களும், பண்பு கொள் பெயரும்-கரியது, கரியன என்றாற்போலும் பண்பினைக் கொண்ட பெயர்களும், இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்-ஒன்று, பத்து, நூறு என்றாற்போலச் சொல்லப்படுகின்ற இத்துணை என வரையறை உணர்த்தி எண்ணப்படும் பொருள்மேல் நிற்கும் பெயர்களும், ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட - பொன்னன்னது, பொன்னன்ன என்றாற்போல உவமத்தினான் பெற்ற பெயர்ச்சொல் உட்பட, அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன - அக்கூற்று ஒன்பதும் மேற்கூறிய பெயர் போலப் பால் அறிய வந்த அஃறிணைப் பெயர்களாம், எ-று. (14)
|
(எ-டு.) ஆ, நாய், குதிரை, ஒட்டகம், புலி, புல்வாய். தெங்கு, பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர் இருபாற்கும் பொதுவாய் நின்றன. கள்ளொடு சிவணி, ஆக்கள், குதிரைகள், கடல்கள், மலைகள் எனப் பன்மை விளக்கி நின்றன.
|