நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   623
Zoom In NormalZoom Out


மை என்பனவும் அப்பாற்படும். (16) 

அஃறிணை இயற்பெயர் பால் உணர்த்துமாறு

173. தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 

இஃது, அஃறிணை இயற்பெயர் பால் உணர்த்துமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  அஃறிணை இயற்பெயர்- கள்ளொடு சிவணாத அஃறிணை
இருபாற்கும் உரிய பெயர், ஒருமையும் பன்மையும் தெரிநிலை உடைய-
ஒருமைப்பாலும்   பன்மைப்பாலும்   விளங்கும்   நிலைமை  உடைய,
வினையொடு  வரினே- அவற்றிற்கு ஏற்ற வினையொடு தொடர்ந்த வழி,
எ-று. 

(எ-டு.) ஆ வந்தது, ஆ  வந்தன;  யானை வந்தது, யானை வந்தன;
குதிரை வந்தது, குதிரை வந்தன என வரும். 

கள்ளொடு சிவணிய இயற்பெயரை  வேறு  கூறினார்,  வினையான்
அன்றிப் பெயர் தாமே பன்மை விளக்கலின். (17) 

விரவுப்பெயர் திணை தெரிய நிற்குமாறு

174. இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமையின்
பிரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும்
நினையுங் காலைத் தத்தம் மரபின்
வினையோ டல்லது பால்தெரி பிலவே. 

இது, நிறுத்தமுறையானே விரவுப்பெயர் கூறுகின்றது. 

(இ-ள்.)   இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்-இருதிணைச்
சொற்கும்  ஒத்த  உரிமைய  ஆதலின்,  பிரிபு  வேறுபடூஉம் எல்லாப்
பெயரும்-உயர்திணைக்கண்   சென்றுழி   உயர்திணைப்   பெயராயும்
அஃறிணைக்கண்   சென்றுழி  அஃறிணைப்  பெயராயும்  வேறுபடூஉம்
விரவுப்பெயர்   எல்லாம்,   நினையுங்காலை-ஆராயுங்காலத்து,  தத்தம்
மரபின்    வினையோடு    அல்லது    பால்   தெரிபு   இலவே  -
அவ்வத்திணையை   உணர்த்துதற்கு  உரிய  முறைமையினை  உடைய
வினைச்சொல்லோடு இயைந்து