உயர்திணைக்கும் ஏற்றலின், அஃறிணைக்கே அஃது ஆகாமையின், அது கொள்ளார். ‘சாத்தி கன்று ஈனும்’ என்பது, ‘கன்று’ என்னுஞ் சார்பான் அஃறிணை தோன்றிற்று; அதனான் கொள்ளார். (19)
விரவுப்பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும்
176.
இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே.
இது, விரவுப்பெயர்க்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
(இ-ள்.)
இயற்பெயர்-சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தம் இன்றிப் பொருள்பற்றி வரும் இயற்பெயர், சினைப்பெயர்-பெருங் காலன், முடவன் எனச் சினை உடைமையாகிய நிமித்தம் பற்றி முதல்மேல் வரும் பெயர், சினைமுதற்பெயரே-சீத்தலைச்சாத்தன், கொடும்புற மருதி எனச் சினைப்பெயரொடு தொடர்ந்து அல்லது பொருள் உணர்த்தாது வரும் இயற்பெயராகிய முதற்பெயர், முறைப்பெயர்க்கிளவி - தந்தை, தாய் எனப் பிறவியான் ஒருவரோடு ஒருவற்கு வரும் இயைபுபற்றி வரும் பெயராய் முறையுடைப் பொருள்மேல் வரும் பெயர், தாமே தானே எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து சொல்லிய அவற்றொடும் - தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்று தொல்லாசிரியரானே விதந்து ஓதப்பட்ட அவற்றோடே, அல்ல அன்னவை பிறவும் ஆங்குத் தோன்றின் கொளல்- எடுத்து ஓதாதனவாய் அவை போல்வன பிறவும் அவ்விரவுதலிடத்தே தோன்றுமாயின் அவற்றையுங் கொள்க, எ-று.
‘அன்ன பிற’ ஆவன, ‘மக, குழவி’ போல்வனவுங்,
|