வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின் விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதல ரென்றி நீயே’’
(அகம்.53)
இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
‘‘வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’’.
(குறுந்.21)
இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றியிருந்தது.
‘‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடைமகன் சென்னி சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே’’
(குறுந்.221)
இது பருவங்கண்டாற்றாது கூறியது. இது முல்லைசான்ற கற்பா யிற்று, அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின்.
‘‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.’’
(குறுந்.66)
இது பருவமன்றென்று வற்புறத்தலின் இருத்தனிமித்த மாயிற்று. ‘‘தேம்படு சிமய’’ (94) என்னுங் களிற்றியானைநிரையும் இருத்தனிமித்தமாம், இக்காலம் வருந்துணையும் ஆற்றினா ளெனத் தான் வருந்துதலின்.
‘‘கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா தொருநின் னல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைவ கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால் அலவ பல்காற் கைதையம் படுசினை யெவ்வமோ டசாஅங் கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து நின்னுறு விழுமங் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே.’’
(அகம்.170)
இவ் அகப்பாட்டு நெய்தல். இரங்கலுரிப்பொருட்டாயிற்று.
‘‘ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே
|