இது
முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணைதொறு மரீஇய பெயருடையோரினுந் திணைநிலைப் பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்)
ஏனோர் பாங்கினுந் திணைநிலைப்பெயர் எண்ணுங் காலை - ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள் கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங்காலத்து; ஆனா வகைய - அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டினை யுடைய எ-று.
உ-ம்:
‘‘சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய கணங்கென நினைதி நீயே யணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே’’
(ஐங்குறு. 363)
இவ் வைங்குறுநூறு உடன்போகின்றான் நலம்பாராட்டிய கூற்றாம்.
‘‘முளவுமா வல்சி யெயினர் தங்கை யிளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேல் விடலை விரையா தீமே.’’
(ஐங்குறு.364)
இவ் வைங்குறுநூறு
கொண்டுடன்போம் காலத்திற்குக் கொண்டுடன்போக் கொருப்படுத்துவ லென்றது.
‘‘கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும் நலமா ணெயிற்றி போலப் பலமிக நன்னல நயவர வுடையை யென்னோற் றனையோ மாவீன் றளிரே.’’
(ஐங்குறு.365)
இவ் வைங்குறுநூறு வரைவிடைவைத்துப் பொகின்றான் மாவினை நோக்கிக் கூறியது. ஏனைப் பெயர்களில் வருவன வந்துழிக் காண்க.
‘‘முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ்கழி யிறவின் கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப் புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந் துறைநனி யிருந்த பாக்கமும் முறைநனி யினிதும னளிதோ தானே துனிதுறந் தகன்ற வல்கு லைதமை நுசுப்பின் மீனெறி பரதவர் மடமகண் மானேர் நோக்கங் காணா வூங்கே.’’
(நற்.101)
இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது.
‘‘அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக் குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச
|