நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2307
Zoom In NormalZoom Out


மர்விரைந் துரைப்பக் கேட்கும் ஞான்றே’’   (அகம்.144)

மீண்டவன்   நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது. இம்
மணிமிடைபவளத்து  வேந்தன் தலைவனாயினவாறுந் தான் அமரகத்து
அட்ட   செல்வத்தையே   மிக்க   செல்வமாகக்  கருதுதற்  குரியாள்
அரசமரபின் தலைவியே என்பதூஉம் உணர்க.

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ.’’
                                       
(கலி.31)

இதனுள்     வேந்தன்    தலைவனாயினவாறும்   வகைகொண்ட
தலைமையின்   அழகை   நுகரவிரும்பினாள்  என்றலிற்  றலைவியும்
அவ்வருணத்தாளாயவாறும்  உணர்க. ‘‘உலகுகிளர்ந்தன்ன’’ என்னும்
அகப்பாட்டுள்    (255)    வாணிகன்   தலைவனாகவுங்   கொள்ளக்
கிடத்தலிற்றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க.

‘‘தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற்
கொடுங்குழை பெய்த செழுஞ்செவிப் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப்
பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய
ரந்துகிற் றலையிற் றுடையின ணப்புலந்
தட்டிலோளே யம்மா வரிவை
யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று
சிறியமுள் ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே.’’        (நற்.120)

விருந்தொடு   புக்கோன்   கூற்று.   செவிலிகூற்றுமாம். இந்நற்றிணை
வாளை யீர்ந்தடிவகைஇ என்றலின் வேளாண்வருண மாயிற்று.

‘‘மலைமிசைக் குலைஇய உருகெழு திருவின்
பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய வேமுறு காலை
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந்திருந்த அருமுனை இயவின்
சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் களமர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்
அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே’’        (அகம்.84)

இது  தூதுகண்டு  வருந்திக் கூறியது. இக் களிற்றியானை நிரையுள்
தன்னூரும்   ‘அருமுனை’யியவிற்   சீறுார்   என்றலிற்றான்  குறுநில
மன்னனென்பது பெற்றாம்.

‘‘அகலிருவிசும்பகம்’’    (214)     என்னும்     அகப்பாட்டும்
பொருணோக்கினான் இதுவேயாமா றுணர்க.

‘‘இருபெரு வேந்தர்