பழிநிற்பத் தம்மொடு போயின்று கொல்லெ னுயிர்.’’
(கலி.24)
இதனுள் ‘நடுநின்’ றென்றதனான் இரு பெரு வேந்தரையுஞ் சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்றும், ‘‘எஞ் செய்பொருள் முற்றுமள’ வென்றதனான் அது முடித்தபின்னர் யாம் பெறுதற் குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியு மளவுமென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுட் ‘கடிமனைகாத்’ தென்றதனை இல்லறமாகவும், ‘ஓம்ப’ வென்றதனைச் செந்தீயோம்ப வென்றுங் கொள்க.
‘‘நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து’’
(அகம்.124)
என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள்வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க.
மேலோர்
முறைமை ஏனோர்க்கு முரித்தே என்னாது நால்வர்க்கு முரித்தே என்றது, முற்கூறிய வணிகரையொழித்த இரு வகை வேளாளரையுங்
கூட்டியென் றுணர்க. அவர் பொருள்வயிற் பிரிந்தனவுஞ் சான்றோர் செய்யுள்களை நோக்கி உய்த்தணர்ந்து கொள்க. அவர்களுள் உழுதுண் பார்க்குக் கலத்திற்பிரிவும் உரித்து, ஏனையோர்க்குக் காலிற்பிரிவே உரித்தென்றுணர்க. (26)
வேளாளர்க்கு இப்பிரிவும் உரித்தெனல்
|