நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2315
Zoom In NormalZoom Out


ஆலஞ்சேரியும்     பெருஞ்சிக்கலும்   வல்லமுங்  கிழாரும் முதலிய
பதியிற்றோன்றி  வேளெனவும்  அரசெனவும்  உரிமையெய்தினோரும்,
பாண்டி    நாட்டுக்    காவிதிப்பட்ட   மெய்தினோருங்,   குறுமுடிக்
குடிப்பிறந்தோர்   முதலியோருமாய்   முடியுடை  வேந்தர்க்கு  மகட்
கொடைக்குரிய வேளாளராகுப.  ‘‘இருங்கோ  வேண்மா னருங்கடிப்
பிடவூர்’’
  (புறம்.395)  எனவும் ‘‘ஆலஞ் சேரி மயிந்த.... னூருண்
கேணிநீ   ரொப்போன்’’
  எனவுஞ் சான்றோர்   செய்யுட்செய்தார்.
உருவப்பஃறேர்       இளஞ்சேட்சென்னி       அழுந்தூர்வேளிடை
மகட்கோடலும்    அவன்    மகனாகிய   கரிகாற்   பெருவளத்தான்
நாங்கூர்வேளிடை மகட் கோடலுங் கூறுவர்.

இதனானே,

‘‘பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்
’’               (புறநா.35)

எனவும்,

‘‘ஞாலத்துக், கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பாரமோம்பி’’           (பதிற்றுப்.13)

எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க.

உ-ம்:

‘‘வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனிநாளே தனித்து’’

என வரும்.                                            (30)

வேதத்தினாற் பிறந்த நூல்களும் நால்வகை
வருணத்தார்க்கும் உரியவாதல்
 

31. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான.
 

இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்துவித்தது.

(இ-ள்.)  ஓத்தின்  ஆன  - வேதத்தினாற் பிறந்த வட நூல்களுந்
தமிழ்நூல்களும்;   உயர்ந்தோர்க்கு   உரிய   -   அந்தணர்  அரசர்
வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய எ-று.

அவை  சமயநூல்களும்  ஒன்றற்கொன்று  மாறுபாடு கூறுந் தருக்க
நூல்களும்  தருமநூல்களும்  சோதிடமும்  வியாகரணம் முதலியனவும்
அகத்தியம்   முதலாகத்   தோன்றிய    தமிழ்நூல்களுமாம்.   வேதந்
தோன்றிய    பின்னர்   அது   கூறிய    பொருள்களை   இவையும்
ஆராய்தலின்  ‘ஓத்தினான’  வென்று   அவற்றிற்குப் பெயர் கூறினார்.
ஓத்தென்பது வேதத்தையே யாதலின்.                        (31)

வேந்தண்தொழில் வேளிர்க்கும் உரித்தெனல்
 

32. வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய
ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே.
 

இது     மலய   மாதவன்   நிலங்கடந்த   நெடுமுடியண்ணலுழை
நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக்  குடிப்பிறந்த வேளிர்க்கும்
வேந்தன் றொழில் உரித்தென்கிறது.

(இ-ள்.)     வேந்து  வினை இயற்கை - முடியுடைவேந்தர்க்குரிய
தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும்
எய்து  இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறநில
மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையன எ-று.

அவர்க்குரிய     இலக்கணமாவன, தம் பகைவயிற் றாமே சேறலுந்,
தாம்    திறைபெற்ற   நாடுகாக்கப்   பிரிதலும்   மன்னர்   பாங்கிற்
பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.

உ-ம்:

‘‘விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர்
வேறுபன் மொழிய தேஎ முன்னி
வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
புனைமா ணெஃகம் வலவயி னேந்திச்
செலன்மாண் புற்ற’’                     (அகம்.215)

என்புழி வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப்