மற் றியாங்கன மொல்லுமோ வறிவுடையீரே யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே’’
(நற்.184)
இந் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது.
‘‘கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக் களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூ ராங்கண் எருமை நல்லான் பெருமுலை மாந்தும் நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு ஆயமும் அணியிழந் தழுங்கின்று தாயும் ஈன்றோள் தாராய் இறீஇய ரென்னுயிரெனக் கண்ணு நுதலு நீவித் தண்ணெனத் தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத் தாழிக் குவளை வாடுமலர் சூடித் தருமணற் கிடந்த பாவையென் அருமக ளேயென முயங்கின ளழுமே’’
(அகம்.165)
இம் மணிமிடைபவளத்துத் தாய் நிலையும் ஆய்த்து நிலையுங் கண்டோர் கூறியவா றுணர்க.
‘‘மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த வன்பி லறனு மருளிற்று மன்ற வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி பெருமட மான்பிணை யலைத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே’’
(ஐங்குறு.394)
இவ் வைங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித் தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது.
‘‘நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’
(ஐங்குறு.399)
இவ் வைங்குறுநூறு தலைவன் மீண்டு தலைவியைத்
தன் மனைக்கட் கொண்டுவந்துழி அவன்தாய் சிலம்புகழீஇ நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறியது.
இன்னுஞ்
சான்றோர் செய்யுள்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
சேரியுஞ் சுரத்தும் தேடிச் செல்லும் தாயரும் உண்மை
|