நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2369
Zoom In NormalZoom Out


விரிச்சி     வேண்டாவென   விலக்கிய   வீரக்குறிப்பும்,  விரிச்சிக்கு
வேண்டும்  நெல்லும்  மலரும்  முதலியன  தருதலும்,   பிற நிமித்தப்
பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும் பிறவுமாம்.

உ-ம்:

‘‘நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ
டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்
செங்கால் வெட்சியுந் திணையுந் தூஉய்
மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப
விரிச்சி யோர்த்தல் வேண்டா
வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே.’’
      (தகடூர்யாத்திரை, புறத்திரட்டு.1241,நிரைகோடல்.10)

இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க.

அரசன் ஏவலாற்போந்தோரும்  விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று
வினைவாய்க்குமென்று அறிதற்கு.

இனி வேய்க்குக்  காரணங்களாவன;  வேய்கூறினார்க்குச்  சிறப்புச்
செய்தல் போல்வன.

உ-ம்:

‘‘மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே
யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற்
புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி
நல்வே யுரைத்தார்க்கு நாம்.’’

என வரும்.

இனி   ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற்  படுவன  வந்துழிக்
காண்க.

இங்ஙனம்     புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே பாடல்
சான்ற  புலனெறி வழக்க’மென்று (தொல். பொ. அகத்.53) அகத்திற்குக்
கூறியது.  நிரைமீட்குங்கால்  அறிந்தார்  அறிந்தவாற்றானே  விரைந்து
சென்று  மீட்பாராதலின்  அரசனை  உணர்த்தாதே மீட்டல் பெறுதும்.
இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க.                           (3)

இவையும் வெட்சித்திணை ஆதல்
 

57. மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையு மத்திணைப் புறனே.
 

இவையும் வெட்சித்திணையா மென்கின்றது.

(இ-ள்.)  மறங்கடைக் கூட்டியதுடிநிலை - போர்க்களத்து மறவரது
மறத்தினைக்   கடைக்கூட்டிய   துடிநிலையும்;   சிறந்த  கொற்றவை
நிலையும்   -அத்தொழிற்குச்   சிறந்த  கொற்றவைக்குப்  பரவுக்கடன்
கொடுக்குங்கால்  அவளது நிலைமை கூறுதலும்; அத்திணைப்புறனே -
அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் எ-று.

‘‘நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு
மொத்திலங் மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந்
துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிரை பாராட்டக் கொண்டு.’’

இஃது   இருவகை   வெட்சிக்கும் பொது, நிரை கொண்டோர்க்கும்
மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொத்தலின்.

‘‘அருமைத் தலைத்தரு மானிரையு ளையை
யெருமைப் பலிகோ ளியைந்தா - ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
றியாந்தன்மேற் சீறாம லின்று.’’

இதனானே    வருகின்ற   வஞ்சித்திணைக்குங்   கொற்றவைநிலை
காரணமாயிற்று,