நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2371
Zoom In NormalZoom Out


சிறப்பினையும்;     வெவ்வாய்  வேலன் -  உயிர்க் கொலை கூறலின்
வெவ்வாயினையும்   உடையனாகிய  வேலன்;  வெறியாட்டு  அயர்ந்த
காந்தளும் - தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்;

செவ்வேள்வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலனென்றார். காந்தள்
சூடி  ஆடுதலிற்  காந்தளென்றார்.  வேலனைக்  கூறினமையிற் கணிக்
காரியையுங்    கொள்க.    காந்தளையுடைமையானும்    பனந்தோடு
உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த
என்றதனானும்   வேலன்   ஆடுதலே  பெரும்பான்மை;  ஒழிந்தோர்
ஆடுதல் சிறுபான்மை என்றுணர்க.

உ-ம்:

‘‘அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத்
தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன்முன்
கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா
ரேர்க்காடுங் காளை யிவன்.’’

இது    சிறப்பறியா   மகளிராடுதலிற் புறனாயிற்று;  வேலனாடுதல்
அகத்திணைக்குச் சிறந்தது.

உ-ம்:

‘‘அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென அறியா மறுவரற் பொழுதில்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்
ஆர நாற வருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து
நக்கனெ னல்லனோ யானே யெய்த்த
நோய்தணி காதலர் வரவீண்
டேதில் வேலற் குலந்தமை கண்டே.’’        (அகம்.22)

‘‘பனிவரை நிவந்த’’ என்னும் (அகம்.98) பாட்டும் அது.

இவற்றுள்     சேயோன்   கருப்பொருளாக  மைவரை யுலகத்துக்
கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய
காந்தள்    அகத்திற்கு   வந்தது,   இது   வேத்தியற்   கூத்தன்றிக்
கருங்கூத்தாதலின்     வழுவுமாய்     அகத்திற்கும்     புறத்திற்கும்
பொதுவாதலிற் பொதுவியலுமாயிற்று. ‘‘வேலன்  றைஇய  வெறியயர்
களனும்’’
 (பத்து.முருகு.222)  என்றாற் போலச்  சிறப்பறியும் வேலன்
தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங்