நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2393
Zoom In NormalZoom Out


64.உழிஞைதானே மருதத்துப் புறனே.
 

இஃது   உழிஞைத்திணை  அகத்திணையுள்  மருதத்திற்குப்  புறனா
மென்கின்றது.

(இ-ள்.)   உழிஞை   தானே   -  உழிஞை  யென்று  கூறப்பட்ட
புறத்திணை;   மருதத்துப்   புறனே   -   மருதமென்று   கூறப்பட்ட
அகத்திணைக்குப் புறனாம் எ-று.

இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர்செலற் காற்றாது
போய்   மதிலகத்   திருந்த   வேந்தன்  மதில்  பெரும்பான்மையும்
மருதத்திடத்த   தாதலானும்,  அம்மதிலை  முற்றுவோனும்  அந்நிலத்
திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருத்தல்
ஒப்புமையானும்,  உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்
போல      இதற்கும்     பெரும்பொழுது     வரைவின்மையானுஞ்,
சிறுபொழுதினும்   விடியற்காலமே  போர்செய்தற்குக்  காலமாதலானும்
உழிஞை   மருதத்திற்குப்   புறனாயிற்று.   மருதநிலத்து   மதிலாதல்
‘‘அகநாடு புக்கவரருப்பம் வௌவி’’ (மதுரைக்.149)யெனப்  பாட்டிற்
கூறியவாற் றானும், ‘‘பிணங்குகதிர்க்   கழனி    நாப்ப  ணேமுற்,
றுணங்குகல னாழியிற் றோன்று மோரெயின், மன்னன்’’
(புறம்.338)
என்றதனானுங் ‘‘கொளற் கரிதாய்க்  கொண்டகூழ்த்தாகி யகத்தார்,
நிலைக்கெளிதா நீர தரண்’’
   (குறள்.745)   என்றதனானு  முணர்க.
மற்று    எதிர்சென்றானை   வஞ்சி வேந்தன் என்னுமெனின்,  அஃது
இருவருந்     தத்தம்   எல்லைக்கண்    எதிர்சென்றிறுப்பரென்றலின்
வஞ்சியாகாதாயிற்று.                                       (9)

உழிஞைத்திணையது பொது இலக்கணம்
 

65.முழுமுத லரண முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகுமென்ப.
 

இது  மேற்கூறிய     உழிஞைத்திணையது     பொதுவிலக்கணம்
உணர்த்துகின்றது.

(இ-ள்.) முழுமுதல் அரணம் - வேற்றுவேந்தன் குலத்துக்கெல்லாம்
எஞ்சாது  முதலாய்  வருகின்ற  முழு அரணை, முற்றலும் கோடலும் -
சென்ற  வேந்தன்  வளைத்தலும்,  இருந்த  வேந்தன்  கைக்கொண்டு
காத்தலுமாகிய;   அனைநெறி  மரபிற்று  ஆகும்  என்ப  -  இரண்டு
வழியாகிய  இலக்கணத்தை  உடைத்து  அவ்வுழிஞைத்திணை  என்று
கூறுவர் புலவர் எ-று.

முழு அரணாவது, மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட்செய்த
அருமதில்.   அது  வஞ்சனை  பலவும்  வாய்த்துத்,  தோட்டி  முள்
முதலியன  பதித்த  காவற்காடு  புறஞ்சூழ்ந்து  அதனுள்ளே இடங்கர்
முதலியன  உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய
பல  பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும்
ஏனைய   பிறவும்   அமைந்து,   எழுவுஞ்  சீப்பும்  முதலியவற்றான்
வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும்