று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண் சேர்வதோர் உபாயமாதலின் ‘உட்குவரத்தோன்று’மென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந்துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார். எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறை யென்பது (பொ. 521) உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய்வரினும்,
ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட் பகுதியும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுளுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங்கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத்திணைக்குங் கொள்க. வெட்சித் திணையின் பொதுவிலக்கணம்
|