நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3796
Zoom In NormalZoom Out


(இ-ள்.)     வேந்து வினை  இயற்கை - முடியுடைவேந்தர்க்குரிய
தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும்
எய்து  இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறநில
மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையன எ-று.

அவர்க்குரிய     இலக்கணமாவன, தம் பகைவயிற் றாமே சேறலுந்,
தாம்    திறைபெற்ற   நாடுகாக்கப்   பிரிதலும்   மன்னர்   பாங்கிற்
பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.

உ-ம்:

‘‘விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர்
வேறுபன் மொழிய தேஎ முன்னி
வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
புனைமா ணெஃகம் வலவயி னேந்திச்
செலன்மாண் புற்ற’’
                      (அகம்.215)

என்புழி   வேறு  பன்மொழிய  தேஎத்தைக்  கொள்ளக்  கருதிப்
போர்த்தொழிலைச்  செலுத்தும்  உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது
குறுநிலமன்னன்   தன்பகைவரின்   நாடு   கொள்ளச்   சென்றதாம்,
வேந்தனெனப் பெயர் கூறாமையின். ‘‘பசைபடு பச்சை நெய்தோய்த்து’’
(244)  என்னும்  அகப்பாட்டினுள்  ‘‘முடிந்தன்  றம்மநாம்  முன்னிய
வினையே’’  என்றலிற்  றானே குறுநிலமன்னன் சென்றதாம். ஏனைய
வந்துழிக் காண்க.                                       (32)

வேளிர்க்குப் பொருட்பிரிவும் உரித்தாதல்
 

33. பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.
 

இஃது  அக் குறுநில  மன்னர்க்குப்  பொருள்வயிற் பிரிதலும் ஓதற்
பிரிதலும் உரிய வென்கின்றது.

(இ-ள்.)  பொருள்  வயினும்  -  தமக்குரிய  திறையாகப்  பெறும்
பொருளிடத்தும்;  உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள் வயினும்
-   உயர்ந்த   நால்வகை   வருணத்தார்க்குரிய   ஒழுக்கத்திலேயான
ஓத்திடத்தும்;  பிரிதல்  அவர்வயின்  உரித்து  -  பிரிந்துசேறல் அக்
குறுநில மன்னரிடத்து உரித்து எ-று.

பொருள்வயிற் பிரிதல்