நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4900
Zoom In NormalZoom Out


9. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.
 

இது நிலனுடைய  நான்கற்குங்   காலங்   கூறி   அந்நான்கற்கும்
பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது.

(இ-ள்)     நடுவு  நிலைத்திணையே - பாலைத்திணை; நண்பகல்
வேனிலொடு   -   எற்பாடுங்   காலையும் என்னும்  இரு  கூற்றிற்கு
நடுவணதாகிய  ஒரு  கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய
பெரும்பகலோடும்     இளவேனிலும்     முதுவேனிலும்    என்னும்
இரண்டனோடும்;   முடிவு  நிலை  மருங்கின்  -  பிரிவெனப்படுதற்கு
முடிவுடைத்தாகிய   குறிஞ்சியும்   முல்லையுமாகிய   ஒரு  மருங்கின்
கண்ணே;  முன்னிய  நெறித்து  -  ஆசிரியன்  மனங்கொள்ளப்படும்
நெறியையுடைத்து எ-று.

‘நிலை’  யென்றது  நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப்
படுமெனவே  அத்துணை  யாக்கமின்றி  ஒழிந்த மருதமும் நெய்தலும்
முடியாநிலமாய் அத்துணை  முன்னப்படாவாயின பாலைக் கென்பதாம்.
பிரிவின்கண்    முடிய    வருவன   வெல்லாம்   இவ்விரண்டற்கும்
முடியவருதலும்   ஒழிந்த  இரண்டற்கும்  அவை  குறைய  வருதலும்
உரையிற்   கொள்க.   என்னை?   சுரத்தருமை   அறியின்,  இவள்,
ஆற்றாளாமெனத்  தலைவன்  செலவழுங்குதலுந், துணிந்து போதலும்,
உடன்போவலெனத்  தலைவி கூறுதலும், அதனை அவன் விலக்கலும்,
இருந்திரங்கலும்  போல்வன  பலவும்  முடியவரும் நிலங் குறிஞ்சியும்
முல்லையுமாகலின்.  சுரத்தருமை  முதலிய  நிகழாமையின்  மருதமும்
நெய்தலும் அப்பொருண்முடிறய வாராவாயின.

‘‘நன்றே காதலர் சென்றஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற வுருவின தோகையுமுடைத்தே.’’    (ஐங்குறு.431)

இது     சுரத்தருமை  நினைந்து  வருந்தினேனென்ற  தலைவிக்கு
அவ்வருத்தம்    நீங்கக்   கார்கால   மாயிற்றென்று   ஆற்றுவித்தது.
இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை.

‘‘கார்செய் காலை