நிலமே மயங்குமாறாயிற்று.
உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும், கருப்பொருள் மயக்குதலும் பெறுமென்றற்கு, திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின்.
உ-ம்:
‘‘அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ’’
(ஐங்குறு.240)
இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது.
‘‘புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போல் புதல்வனோ டென்னீத் தோனே’’
(ஐங்குறு.265)
இது வாயில்களுக்குத் தலைவி கூறியது.
‘‘வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே’’
(ஐங்குறு.283)
இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளி யிடத்துச் சென்ற தோழி கூறியது.
இவை
குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன; இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கமும் நிகழ்ந்தன.
‘‘அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ மறிய வாகுமோ மற்றே முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே’’
(ஐங்குறு. 366)
இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத்
தோழி பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல்.
இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளோடு உ
|