நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4924
Zoom In NormalZoom Out


காட்சி     நிகழ்ந்ததேல்     உள்ளப்புணர்ச்சியேயாய்     மெய்யுறு
புணர்ச்சியின்றி வரைந்த கொள்ளுமென்றுணர்க.                (16)

முதற்பொருள் யாண்டும் இருவகைத்தாதல்
 

17. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே.
 

இது  முற்கூறிய  முதற்பகுதியைத்    தொகுத்து   எழுதிணையும்
இவ்வாற்றானுரிய வென்கின்றது.

(இ-ள்)  முதல்  எனப் படுவது - முதலென்று கூறப்படும் நிலனும்
பொழுதும்;  அஇரு  வகைத்து - அக்கூறியவாற்றான் இருவகைப்படும்
யாண்டும் எ-று.

இது     ‘கூறிற்றென்ற’  லென்னும் உத்திவகை. இதன்பயன் முதல்
இரண்டுவகை  என்றவாறாம்.  தமக்கென நிலனும் பொழுதும் இல்லாத
கைக்கிளையும் பெருந்திணையும் நிலனில்லாத பாலையும் பிறமுதலொடு
மயங்கினவேனும்   அவை  மயங்கிய  நிலனும்  பொழுதும்  அவ்வத்
திணைக்கு     முதலெனப்படுமென்பதாம்.     இது      முன்னின்ற
சூத்திரத்திற்கும் ஒக்கும்.                                  (17)

கருப்பொரு ளிவையெனல்
 

18. தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவுங் கருவென மொழிப.
 

இது      நிறுத்தமுறையானேயன்றி       அதிகாரப்பட்டமையின்
உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுத னுதலிற்று.

(இ-ள்)  தெய்வம்  உணாவே  மா மரம் புள் பறைசெய்தி யாழின்
பகுதியொடு   தொகைஇ  -  எல்லாத்  திணைக்குந் தெய்வம் உணா
விலங்கு மரம் புள் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே
கூட்டி;  அவ்வகை  பிறவும்  கருஎன  மொழிப  -  அவைபோல்வன
பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

யாழின்  பகுதி என்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை
யாழென  வேறு  வருதல்  கொள்க. ‘அவ்வகை பிறவும்’ என்றதனான்
எடுத்தோதிய  தெய்வம்  ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும்
உள;  அவை  ‘மாயோன்மேன’ (5) என்புழிக் காட்டினாம். இதனானே
பாலைக்குத்    தெய்வமும்    இன்றாயிற்று.   இன்னும்   ‘அவ்வகை’
என்றதனானே, பாலை