நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4928
Zoom In NormalZoom Out


பகுதி கூறுகின்றது.

(இ-ள்.)     திணைதொறும் மரீஇய பெயர் - நால்வகை நிலத்தும்
மரீஇப்போந்த     குலப்பெயரும்;     திணைநிலைப்    பெயர்   -
உரிப்பொருளிலே நிற்றலையுடைய பெயரும்; பெயரும் வினையுமென்று
அஇருவகைய - பெயர்ப்பெயரும் வினைப்பெயருமென்று அவ்விரண்டு
கூற்றையுடையவாம் எ-று.

நால்வகை      நிலத்தும்      மருவிய       குலப்பெயராவன:-
குறிஞ்சிக்குக்கானவர்  வேட்டுவர் இறவுளர் குன்றவர் வேட்டு வித்தியர்
குறத்தியர் குன்றுவித்தியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும்  உணர்க.
முல்லைக்குக்   கோவலர்  இடையர்  ஆயர்  பொதுவர்  இடைச்சியர்
கோவித்தியர்  ஆய்ச்சியர்  பொதுவியர்.  நெய்தற்கு நுளையர் திமிலர்
பரதவர்  நுளைத்தியர்  பரத்தியர்; ஏனைப் பெண் பெயர் வருமேனும்
உணர்க. மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைசியர்;
ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க.

முன்னர்   ‘வந்த நிலத்தின்பயத்த’ என்புழிக் காலத்தையும் உடன்
கோடலின் ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழுதொடு மருவுதலும்
பெறப்படுதலிற் பொழுது  முதலாக  வரும்  பாலைக்குத் திணைதொறு
மரீஇய  பெயருந் திணைநிலைப்பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர்
மறவர் மறத்தியர் எனவும், மீளி விடலை காளை எனவும் வரும்.

இனி உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப்பெயரும்
நாடாட்சிபற்றிவரும்   பெயருமாம்.  குறிஞ்சிக்கு  வெற்பன்  சிலம்பன்
பொருப்பன், கொடிச்சி; இஃது ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை
யென்றதனாற்    கொள்க.    முல்லைக்கு    அண்ணல்   தோன்றல்
குறும்பொறை  நாடன்,  மனைவி.  நெய்தற்குக்  கொண்கன் துறைவன்
சேர்ப்பன்   மெல்லம்புலம்பன்.   தலைவிபெயர்   வந்துழிக்  காண்க.
மருதத்திற்கு மகிழ்நன் ஊரன், மனையோள் எனவரும்.