நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4974
Zoom In NormalZoom Out


வனப் பிழந்த தோளும் வெயிறெற
வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியி
னெல்லையி லிடும்பை தரூஉ
நல்வரை நாடனொடு வந்த மாறே.’’
        (ஐங்குறு.392)

இவ்  வைங்குறுநூறு   மீண்டும்  வந்த   தலைவி வழிவரல்  வருத்தங்
கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது.

‘‘அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே.’’
          (ஐங்குறு.203)

இஃது உடன்போய் மீண்ட  தலைவி   ‘நீ  சென்ற  நாட்டு  நீர்
இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தா’யென்ற தோழிக்குக் கூறியது.

‘‘அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற வருவிக்
கோள்வரு மென்னையை மறைத்த குன்றே.’’
(ஐங்குறு.312)

இவ் வைங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற
தோழிக்குத்  தலைவி  தலைவனை  மறைத்த  மலையை வாழ்த்தியது.
பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.

இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:-

‘‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரு மென்ப தடமென் றோளி
யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே.’’

இனி அயலோர் கூற்று நிகழுமாறு:-

‘‘துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி
யெவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மடமகள்
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.’’
                                   (ஐங்குறு.393)

செய்யுளியலுட்   ‘பார்ப்பான் பாங்கன்’ (தொ. பொ. செய். 190)
‘பாணன் கூந்தன்’ (தொ.  பொ. செய். 191) என்னுஞ் சூத்திரங்களாற்
பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க.            (42)

முன்னிகழ்ந்தவை பின் தலைவனுந் தலைவியும்
நினைத்தற்கு நிமித்தமாதல்

 

43.நிகழ்ந்தது நினைத்தற் கேதுவும் ஆகும்.
 

இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) முன்னர் நிகழ்ந்ததொரு  நிகழ்ச்சி  பின்னர்  நினைத்தற்கு
முரிய நிமித்தமாம் எ-று.

என்றது,     முன்னர்த்  தலைவன்கண்  நிகழந்ததொரு  நிகழ்ச்சி
பின்னர்த்  தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவிகண்
நிகழ்ந்ததொரு  நிகழ்ச்சி  பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவா
மென்றவாறாம்.