நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5033
Zoom In NormalZoom Out


‘‘தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி
யழுதுவிழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன்
வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர்
நீணாட்கோ ளென்று நினைந்து’’
          (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு 1326.
                                எயில்கோடல் 5)

இது புறத்தோன் வாணாட்கோள்.

‘‘முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக்
கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - புற்றிழிந்த
நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல்
வேகக் குழாக்களிற்று வேந்து’’

            (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1338.
                                எயில்காத்தல் 4)

இஃது அகத்தோள் வாணாட்கோள்.

மடையமை   ஏணிமிசை மயக்கம் - மீதிடு பலகையோடும் மடுத்துச்
செய்யப்பட்ட   ஏணிமிசைநின்று  புறத்தோரும்  அகத்தோரும்  போர்
செய்தலும்;

உ-ம்:

‘‘சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு
மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப்
புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர்
கொள்ளற் கரிய குறும்பு’’

இது புறத்தோர் ஏணிமயக்கம்.

‘‘இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு
மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த
ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு
வாயி லெவனாங்கொல் மற்று’’

இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.

இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.

உ-ம்:

‘‘பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க்
கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரும்
மண்ணோடு சார்த்தி மதில்சார்த் தியவேணி
விண்ணொடு சார்த்தி விடும்’’

            (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு 1330.
                                 எயில்கோடல் 9)

என வரும்.

கடைஇச்  சுற்று   அமர்  ஒழிய  வென்று கைக்கொண்டு முற்றிய
முதிர்வும்  -  புறத்தோன்  தன்  படையைச்  செலுத்திப்  புறமதிலிற்
செய்யும் போரின்றாக,