நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5329
Zoom In NormalZoom Out


 

பெறேஎம் இறீஇயரெம் முயிரே.”            (குறுந்.169)

இஃது     அவனொடு      நகுதற்குத்     தோன்றிய   உணர்வு
இன்றியமையாமை  கூறிக் காதற்சிறப்பு உரைத்தது.

ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - தலைவற்குத் தலைவியைப்
பாதுகாத்துக்   கொள்ளெனக்  கூறுங்   கிளவியது    பகுதிக்கண்ணும்:
தோழிமேன கிளவி.

பகுதியாவன வரைவிடைப்பிரிவு முதலிய பிரிவிடத்தும் புனத்திடைப்
புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்துங் கூறுவனவாம்.

உ-ம்:

“நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தன் மாமலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச்சேர்ப்ப
தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்
டன்னா யென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ விலளே”       (குறுந்.397)

“பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
வொருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே”            (குறுந்.115)

“எறிந்தெமர் தாமுழுத வின்குர லேனன்
மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு”      (ஐந்திணை ஐம்.18)

“அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவி நீள்புனங் கண்டும்
பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.”        (ஐங்குறு.284)

இது,   தினை   அரிந்துழிக்   கிளியை  நோக்கிக் கூறுவாள்போற்
சிறைப்புறமாக  ஓம்படுத்தது. இன்னும்  ஓம்படைக்   கிளவியென்றதற்கு
இவளை நீ பாதுகாத்துக் கொள்ளென்று தலைவன் கூறுங்    கிளவியது
பகுதிக்கண்ணுமென்றும் பொருள் கூறுக.

“பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்கூண் ஆயத் தோரான் தெண்மணி
பைப்பய விசைக்கும் அத்தம் வையெயிற்
றிவளொடுஞ் செலினோ நன்றே குவளை
நீர்சூழ் மாமலர் அன்ன கண்ணழக்
கலையொழி பிணையிற் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆ