கிளி கடிதல் தேற்றா ளிவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்
உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.”
(அகம்.28)
என வரும். இதனானே வரையும் பருவமன்றெனக் கூறுதலுங் கொள்க.
என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலை யடுத்த வன்புறைக்கண்ணும்
- என்பு உருகுமாறு தலைவனாற் பிரியப்பட்ட தலைவிக்கு
வழிபாடாற்றிச் சென்று தான்
கூறும் மொழியை
அவள்மனத்தே செலுத்தித் தலைவன் அன்பை அவளிடத்தே சேர்த்துக்
கூறிய வற்புறுத்தற் கண்ணும்:
அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுழிப்
பிரிதலுங், காவற்குப் பிரிதலுமாம். ஆண்டு
வற்புறுத்துங்கால் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் பிறவாறும்
வற்புறுத்தும். முன் ‘செங்கடு மொழியா’ லென்புழி இயற்பழித்தனவும் வற்புறுத்துதல் பயனாகக் கூறியன வென்றுணர்க.
உ-ம்:
“யாஞ்செய் தொல்வினைக் கெவன்பே துற்றனை
வருத்தல் வாழி தோழி யாஞ்சென்
றுரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை யமிழ்தம் பெயற்கேற் றாஅங்
குருகி யல்குத லஞ்சுவ லுதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயி னேற்றி
நயம்பெரி துடைமையிற் றாங்கல் செல்லாது
கண்ணீ ரருவி யாக
அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே.”
(நற்.88)
இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது.
“தோளுந் தொல்கவின் றொலைந்தன நாளும்
அன்னையும் அருந்துய ருற்றனள் அலரே
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேரா வெழுவ ரடிப்படக் கடந்த
ஆலங் கானத் தார்ப்பினும் பெரிதென
ஆழல் வாழி தோழி யவரே
மாஅல் யானை மறப்போர்ப் புல்லிக்
காம்புடை நெடுவரை வேங்கடத் தும்பர்
அறையிறந் தகன்றன ராயினு நிறையிறந்
துள்ளா ராதலோ வரிதே செவ்வேன்
முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக்கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப் பல
|