நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5392
Zoom In NormalZoom Out


 

வினைக் ககறி யாயி னின்னொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா வந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய
ஆய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே.”      (நற்.205)

இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.

“தேர்செல அழுங்கத் திருவிற் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யான்றொடங் கினெனா னிற்புறந் தரவே.”   (ஐங்குறு.428)

இஃது ஐயந் தீர்த்தது.

“ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.”    (குறுந்.63)

இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது.

மீட்டு வரவு  ஆய்ந்த  வகையின்கண்ணும்  -  பிரிந்த  தலைவன்
இடைச்சுரத்து    உருவு  வெளிப்பட்டுழியும்  மனம்  வேறுபட்டுழியும்
மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்:

“உழையணந் துண்ட விறைவாங் குயர்சினைப்
புல்லரை இரத்திப் பசுங்காய் பொற்பக்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால்
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறு மடந்தை யென்றலின் தான்தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந்
துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத் தியவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.”   (நற்.113)

இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது.

“ஒன்று தெரிந் துரைத்திசின் நெஞ்ச புன்காற்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற்
களிறுநின் றிறந்த நீரல் ஈரத்துப்
பால்வீ தோன்முலை யகடுநிலஞ் சேர்த்திப்
பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே
யாள்வினைக் ககல்வா மெனினும்