“புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகிற் றோன்றும் ஊரன்
புதுவோர் மேவல னாகலின்
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.”
(ஐங்குறு.17)
இது, பிரித்தல்,
“நாமவர் திருந்தெயி றுண்ணவு மவர்நமது
ஏந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங்
கண்சுடு பரத்தையின் வந்தோர்க் கண்டும்
ஊடுதல் பெருந்திரு வுறுகெனப்
பீடுபெற லருமையின் முயங்கி யோனே.”
இது, பெட்டது.
“நீரர் செறுவின்” (கலி.75)
என்னும் மருதக்கலியும் அது.
இனிப் ‘பல்வேறு நிலை’யாவன, தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக்
கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர்கூறக்
கேட்டுக் கூறுவனவுந், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே
கூறுவனவுங், தூதுவிடக் கருதிக் கூறுவனவும், நெஞ்சினை யும் பாணனையும்
தூதுவிட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புட்களை நொந்து கூறுவனவும்,
பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும்,
அவன் வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவுங்
கூறிய பருவத்தின் வாராது பின்னர்
வந்தவனொடு கூடியிருந்து
முன்னர்த் தன்னை வருத்திய குழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக்
கூறுவனவுந், தலைவன் தவறில னெனக் கூறுவனவும், காமஞ்சாலா
விளமையோளைக் களவின்கண் மணந்தமை
அறிந்தேனெனக்
கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம்.
“அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே.”
(குறுந்.20)
இது, செலவழுங்கக் கூறியது.
“வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
மலையுடை யருஞ்சுர மென்பநம்
முலையிடை முனிநர் சென்ற வாறே.”
(குறுந்.39)
“எறும்பி அளியிற் குறும்பல் சுனைய
உலைக்கல் லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்குங்
கவலைத் தென்பவவர் தேர்சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.”
(குறுந்.12)
இவை, வழியருமை
|