மடவோள் கூறச்
செய்வினை யழிந்த மைய னெஞ்சின்
துனிகொள் பருவரல் தீர வந்தோய்
இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பொருந்திதழ் கமழும் விரிந்தொலி கதுப்பின்
இன்னகை யிளையோள் கவவ
மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே.” (அகம்.314)
இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு
தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது.
“மடவ மன்ற தடவுநிலைக்கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே”. (குறுந்.66)
இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.
“எனநீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்று அவர் வாய்மொழித் தூதே.” (கலி.26)
இது, தூதுவந்தமை தலைவிக்குக் கூறியது.
“கைவல் சீறியாழ்ப் பாண நுமரே
செய்த பருவம் வந்துநின் றதுவே
எம்மின் உணரா ராயினுந் தம்வயின்
பொய்படு கிளவி நாணலும்
எய்யா ராகுதல் நோகோ யானே.” (ஐங்குறு.472)
இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த
பாணற்குத் தோழி கூறியது.
தூதுவிட்டது வந்துழிக் காண்க.
“பதுக்கைத்தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை யுறுபகை நினையாது
யாங்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே.” (ஐங்குறு.362)
இது சேணிடைப்பிரிந்து இரவின்வந்துழிக் கூறியது.
“ஆமா சிலைக்கு மணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடுந்
தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கூறும்
வாய்மாண்ட பல்லி படும்.” (கைந்நிலை.18)
இது நிமித்தங் காட்டிக் கூறியது.
இன்னும் அதனானே நமர் பொருள்வேண்டுமென்றார் அதற்கு
யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக்
|