கண்ணும்
எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன.
இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது;
காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக்
கிழமைபூண்டு இல்லறநிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற்
பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற் கூடி
முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்
பருவத்தோரும் இடைநிலைப் பருவத்தோருங், காமஞ்சாலா
இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் ‘கண்ணிய காமக்
கிழத்திய’ ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர்
கூத்தும் பாட்டும் உடையராகிவருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண்
இழிந்தோரும் அடியரும் வினைவலபாங்கினரும் பிறருமாம்.
இனிக் காமக்கிழத்தியரைப்,ார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த
மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து
கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர்
அறியார்: என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங்
கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ்செய்யின் மயங்கக்
கூறலென்னுங் குற்றந் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றோர்
பலருங் காமக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய்செய்து
கூறுமாறும் உணர்க.
(இ-ள்.)
புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது
முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும் இடைவிட்டு
மயக்குதலான் தலைவிக்கண் தோன்றிய புலவியிடத்தும்; காமக்கிழத்தியர்
புலந்து கூறுப.
உ-ம்:
“மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
தண்டுறை யூரனெஞ் சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை
அவைபுகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்பவவன் பெண்டிர்
|