நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5450
Zoom In NormalZoom Out


 

விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்தொழியப் பந்தர் ஓடி
ஏவன் மறுக்குஞ் சிறுமது யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்துண்ணுஞ் சிறுமது கையளே.”      (நற்.110)


இது மனையறங் கண்டு மருண்டு உவந்து கூறியது.

“அடிசிற் கினியாளை அன்புடை யாளைப்
படிசொற் பழிநாணு வாளை - அடிவருடிப்
பின்தூங்கி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால்
என்றூங்கும் கண்கள் எனக்கு”

என்னும்    பாட்டுச்     செவிலி     கூற்றன்றாயினுந்   தலைவன்
மனையறங் கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க. (12)

அறிவர்க்குரிய கூற்று இவை எனல்

154. சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய.
இஃது அறிவரது கூற்றுக் கூறுகின்றது.

(இ-ள்.)    முற்கூறிய    நல்லவை    யுணர்த்தலும்    அல்லவை
கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்கு முரிய எ-று.

என்றது,    அறியாத  தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்
ளோர் அறம் பொரு ளின்பங்களாற்  கூறிய  புறப்புறச்  செய்யுட்களைக்
கூறிக் காடுடவரென்பதாம்.

உ-ம்:

“தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை”                   (குறள்.55)

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”            (குறள்.56)

“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”             (குறள்.51)

இவை நல்லவையுணர்த்தல்.

“ஏறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.”           (நாலடி.363)

“தலைமகனின் தீர்ந்தொழுகல் தான்பிறரில் சேறல்
நிலைமையில் தீப்பெண்டீர்ச் சார்தல் - கலனணிந்து
வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல்
கோற்றொடியார் கோளழியு மாறு.”          (அறிநெறி.94)

இவை அல்லவை