நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5454
Zoom In NormalZoom Out


 

மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை
முகிழ்செய முள்கிய தொடர்பவ ளுண்கண்
அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய்
இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ;

இலங்கேர் எல்வளை யேர்தழை அல்குல்
நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப்
புலந்தழப் புல்லாது விடுவாய்
இலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காண்நீ;

எனவாங்கு. அனையளென் றளிமதி பெரும நின்னின்
றிறைவரை நில்லா வளையள் இவட்கினிப்
பிறையேர் சுடர்நுதற் பசலை
மறையச் செல்லும்நீ மணந்தனை விடினே.”       (கலி.125)

என்னும் நெய்தற்கலி கைகோள் இரண்டற்குங் கொள்க. (17)

தலைவி தலைவனொடு அயன்மைகூறவும் பெறுவளெனல்

159. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி
அகன்மலி ஊட லகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.

இது, தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்.)  அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி  அன்பிலை
கொடியையெனக்  கேட்ட தலைவன்   முனிந்த    உள்ளத்தனாங்கொல்
லோவென   ஐயுற்று    அவனது   குறிப்பை   அறிதல்  வேண்டியும்;
அகன்மலி   ஊடல்  அகற்சிக்  கண்ணும்  -  தனது  நெஞ்சில் நிறைந்
துநின்ற ஊடல்  கையிகந்து   துனியாகிய   வழி    இஃது    அவற்கு
எவனாங்கொல்லென அஞ்சிய    வழியும்;   கிழவி  வேற்றுமைக்கிளவி
தோற்றவும்  பெறும்  -  தலைவி    தலைவனொடு   அயன்மையுடைய
சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும் எ-று.

உ-ம்:

“நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும்உரையல் அவர்நமக்
கன்னையும் அத்தனும் அல்லரோ
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.”        (குறுந்.93)

இதனுள்  அவரை அன்பிலை கொடியையொன்னாதி,  அன்பில் வழி
நின் புலவி அவரை என்செய்யும் அவர்    நமக்கு     இன்றியமையாத
எமரல்லரோவென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க. (18)

தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்

160. காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணுங் காலைக் கிழவேற் குரித்தே
வழிபடு கிழமை யவட்கிய லான.

இது, தலைவி  வேற்றுமைக்கிளவி தோற்றிய  பின்னர்த்  தலைவற்கு
உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) காமக்  கடப்பினுட்  பணிந்த  கிளவி - அங்ஙனந் தலைவி
கண்