நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5471
Zoom In NormalZoom Out


 

ம்  மடனுமாகியவற்றையெல்லாம்  ;   கிழவன்   வன்புறுத்து  அல்லது
சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் எ-று.

எனவே,    இவற்றை    முன்னர்    நிலைபெறுத்திப்   பின்னர்ப் பிரியுமாயிற்று.  சொல்லாது   பிரியுங்கால்,  ‘போழ்திடைப்    படாமன்
முயங்கியும்’     அதன்றலைத்   ‘தாழ்கதுப்   பணிந்து   முளைஎயி்ற்
றமிழ்தூறும்ம  தீ  நீரைக்  கள்ளினு  மகிழ்  செய்யு  மெனவுரைத்தும்’
(கலி.4) இவை     முதலிய   தலையளிசெய்து   தெருட்டிப்     பிரிய
அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள்  வற்புறுத்துவன
ஆயின.

இனி     உலகத்தார்     பிரிதலும்   ஆற்றியிருத்தலுமுடையரென
உலகியலாற் கூறலும்    பிரிவுணர்த்திற்றேயாம்.    இனிப்   பிரிவினை
விளங்கக்கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம்.

“யாந்தமக் கொல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே.”              (குறுந்.79)

இது சொல்லாது பிரிதல்,

“அரிதாய வறனெய்தி”                         (கலி.11)

இது சொல்லிப் பிரிதல்.                                    (43)

தலைவன் செலவிடையழுங்கல் இன்னதன்பொருட்டெனல்

185. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்.

இது செலவழுங்கலும் பாலையா மென்கின்றது

(இ-ள்.)  செலவிடை அழுங்கல்  செல்லாமை  அன்றே - தலைவன்
கருதிய    போக்கினை  இடையிலே   தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல்
ஆற்றாமைக்கன்று ;   வன்புறை   குறித்தல்    தவிர்ச்சி   ஆகும்  -
தலைவியை  ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியாகும் எ-று.

செலவழுங்கி ஆற்றுவிக்க அவள்  ஆற்றியிருத்தல்  இப்  பிரிவிற்கு
நிமித்தமாதலிற் பாலையாயிற்று.

“மணியுரு விழந்த அணியிழை தோற்றங்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
உழைய மாகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.”       (அகம்.5)

“களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடுதந் தன்ன
வளம்பெரிது பெறினும் வாரலென் யானே.”     (அகம்.199)

இவை வன்புறைகுறித்துச் செலவழுங்குதலிற் பாலை யாயிற்று.   (44)

பாசறைப்புலம்பல் இன்னுழியாகாதெனலும்

இ்ன்னுழியாமெனலும்

186. கிழவி நிலையே வினையிடத் துரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்

இஃது, அகத்திணையியலுட் ‘பாசறைப் புலம்பலும்’  (தொல்.அகத்.41)
என்றார்   ஆண்டைப்புலம்பல் இன்னுழி யாகாது   இன்னுழியா  மென
வரையறை கூறுகின்றது.

(இ-ள்.)