நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5472
Zoom In NormalZoom Out


 

யார்     - தலைவியது தன்மையை வினை செய்யா நிற்றலாகியவிடத்து
நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப்பெறார் ;  வென்றிக் காலத்து
விளங்கித்  தோன்றும் - வெற்றி  நிகழுமிடத்துந் தான்குறித்த  பருவம்
வந்துழியுந்     தூதுகண்டுழியும்     வருத்தம்    விளங்கிக்  கூற்றுத்
தோன்றி்ற்றாகச் செய்யுள் செய்ப எ-று.

உரையாரெனவே   நினைத்தலுள   தென்பதூஉம்,   அது  போர்த்
திறம்புரியும் உள்ளத்தாற்   கதுமென    மாயுமென்பதூஉங்   கொள்க.
வினையிடம்  -    வினைசெய்யிடம்.  காலத்து  மென்னும் எச்சவும்மை
தொக்கு நின்றது. அன்றி அங்ஙனம் பாடங்கூறலும் ஒன்று.

உ-ம் :

“வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன
தளைபிணி யவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை
சிதரலந் துவலை தூவலின் மலருந்
தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை
விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி
மங்குன் மாமழை தென்புலம் படரும்
பனியிருங் கங்குலுந் தமியள் நீந்தித்
தம்மூ ரோளே நன்னுதல் யாமே
கடிமதிற் கதவம் பாய்தலில் தொடிபிளந்து
நுதிமுக மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி
கழிபிணிக் கறைத்தோல் பொழிகணை யுதைப்பத்
தழங்குகுரன் முரசமொடு மயங்கும்யாமத்துக்
கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள்
இரவுத்துயில் மடிந்த தானை
உரவுச்சின வேந்தன் பாசறை யேமே”         (அகம்.24)

இதனுட்   கணையுதைப்ப   முரசொடு  மயங்கும் யாமத்துத் துயின்
மடிந்து  வாளுறை   செறியாத்   தானையையுடைய  வேந்த னெனவே
வென்றிக்காலங்   கூறியவாறுங்   ‘தம்மூரோளே’  ‘பாசறையேமே’ என
கிழவிநிலை உரைத்தவாறுங் காண்க.

பருவங்கண்டுந்    தூதுகண்டுங்கூறியவை   ‘பாசறைப்  புலம்பலும்’
(தொல்.அகத்.41) என்புழிக் காட்டினாம்.

பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்கும் தலைவிக்குமாவதோ

ரிலக்கணமுரைத்தல்

187. பூப்பின் புறப்பா டீராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.