நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5480
Zoom In NormalZoom Out


 

செல்லாமையிற்   குதிரையைக்  கூறினார்.  இஃது  இடையில் தங்காது,
இரவும் பகலுமாக  வருதல் கூறிற்று.   இதனை  மீட்சிக்கெல்லை கூறிய
சூத்திரங்களின்பின்  வையாது,   ஈண்டுத்   துறவு  கூறியதன்  பின்னர்
வைத்தார்,     இன்ப      நுகர்ச்சியின்றி    இருந்து    அதன்மேல்
இன்பமெய்துகின்ற    நிலையாமை   நோக்கியும்,    மேலும்   இன்பப்
பகுதியாகிய     பொருள்      கூறுகின்றதற்கு    அதிகாரப்படுத்தற்கு
மென்றுணர்க.

உ-ம் :

“வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்
தினவண் டார்க்குந் தண்ணம் புறவின்
வென்வேல் இளையர் இன்புற வலவன்
வள்புவலித் தூரின் அல்லதை முள்ளுறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப் புதல
பூங்கொடி யவரைப் பொய்யதள் அன்ன
உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி
மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய
புன்தலைச் சிறாரோ டுகளி மன்றுழைக்
கவையிலை யாரின் இளங்குழை கறிக்குஞ்
சீறூர் பல்பிறக் கொழிய மாலை
இனிதுசெய் தனையால் எந்தை வாழிய
பனிவார் கண்ணள் பலபுலந் துறையும்
ஆய்தொடி யரிவை கூந்தல்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே.”        (அகம்.104)

இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செவ்விக்கேற்ப ஊராது
கோலூன்றின்  லகிறந்தன  செலவிற்குப்   பற்றாத    குதிரைத்தேரேறி
இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து  பூச்சூட்டினை  இனிது
செய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க.

“இருந்த      வேந்தனருந்தொழின்      முடித்தென”    என்னும்
அகப்பாட்டினுள்,

“புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்த தல்லது வந்தவாறு
நனியறிந் தன்றோ விலனே
இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
மானுரு வாகநின் மனம்பூட் டினையோ
வுரைமதி வாழிநீ வலவ.” (அகம்.384)

என     உள்ளம்போல    உற்றுழி     உதவிற்றெனத்     தலைவன்
கூறியவாறு காண்க.                                       (53)

நான்காவது கற்பியற்கு

ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த

காண்டிகையுரை முடிந்தது.