ஆயெண் கிளவியும்
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி,
இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.
223 அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
`இ, ஐ, ஆய்' என வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.
224 "இர், ஈர், மின்" என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவாற்று மருங்கினும்
சொல் ஓரனைய' என்மனார் புலவர்.
225 எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம் பாற்கும் உரிய, தோன்றலாறே.
226 அவற்றுள்,
முன்னிலை, தன்மை, ஆயீரிடத்தொடு
மன்னாது ஆகும், வியங்கோள் கிளவி.
227 பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை,
அவ் வயின் மூன்றும், `நிகழும் காலத்துச்
செய்யும்' என்னும் கிளவியொடு கொள்ளா.
228 செய்து, செய்யூச், செய்பு, செய்தென,
செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என
அவ் வகை ஒன்பதும் வினை எஞ்சு கிளவி.
229 பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்று இயல்பினவே.
|